காவிரியில் தண்ணீர் திறப்பு: டெல்டா விவசாயிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்/ கும்பகோணம்/ திருவாரூர்/ நாகப்பட்டினம்: டெல்டா மாவட்டங்களின் பாசனம் மற்றும் ஆடிப்பெருக்கு விழாவுக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதற்கு, டெல்டா மாவட்ட விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால், அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ள நிலையில், அணையின் பாதுகாப்பு கருதியும், டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காகவும், ஆடிப் பெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாடவும் நேற்று பிற்பகல் 3 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன்: மேட்டூர்அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் டெல்டா மாவட்ட பாசனத்துக்கு பேருதவியாக இருக்கும்.

அதேநேரத்தில், மேட்டூர் அணையின் நீர்வரத்து, வெளியேற்றம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு, கொள்ளிடத்தில் அதிகளவு தண்ணீரை திறந்துவிடாமல் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆறுகளிலும் திறந்துவிட வேண்டும்.

மேலும், இந்த ஆறுகளில் இருந்து அந்தந்த பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தண்ணீர் குறுவை சாகுபடிக்கும், சம்பா சாகுபடியைத் தொடங்குவதற்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.

நசுவினி ஆறு படுக்கை அணைவிவசாய சங்கத் தலைவர் வா.வீரசேனன்: காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்கும் பணியை உடனடியாக ஆட்சியர்கள் நிறுத்த வேண்டும். அப்போதுதான், அந்த நீர்நிலைகளில் தண்ணீரை நிரப்ப முடியும்.

கல்லணைக் கால்வாயில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும். அப்போதுதான் கிளை வாய்க்கால்களில் முழுமையாக தண்ணீர் செல்லும்.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமல்நாதன்: மேட்டூர் அணையில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் ஆடிப்பெருக்கு விழாவுக்காக மட்டுமே இருக்க வேண்டும். கர்நாடகாவில் இருந்து தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால், மேட்டூரில் தண்ணீர் திறப்பதை நீடிக்கலாம். தமிழக அரசு முதலில் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து ஏரி, குளம், குட்டைகள் மற்றும் நீராதாரங்களில் தண்ணீரை நிரப்ப வேண்டும்.

கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் உள்ளிட்ட ஆறுகள் மற்றும் கிளை ஆறுகளில் சாதாரண விநியோக மட்டம் அளவுக்கு திறந்துவிடலாம். மேலும், கர்நாடகா, கேரளா மாநிலங்களின் மழைப் பொழிவு குறித்து இந்தியவானிலை ஆராய்ச்சி மையம் ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை அறிவிப்பு வெளியிட வேண்டும். இதைப் பொறுத்து இங்கு ஆறுகளில் திறக்கப்படும் தண்ணீரின் அளவை முடிவு செய்யலாம்.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன்: காவல் துறை, நீர்ப்பாசனத் துறை, வருவாய்த் துறை கொண்ட குழுக்களை அமைத்து, கண்காணிப்பு பணி மேற்கொண்டு, மேட்டூர் அணை தண்ணீரை ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும். இந்தத் தண்ணீர் நிலத்தடி நீரை மேம்படுத்த உதவும். மேலும், சம்பாசாகுபடிக்கு தேவையான விதைநெல் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி டெல்டா விவசாயிகள் குழும பொதுச் செயலாளர் சத்யநாராயணா: திருவாரூர் மாவட்டத்தில் சம்பா நேரடி விதைப்பு ஆகஸ்ட் 2-வது வாரத்தில்தான் தொடங்கும். அப்போது தண்ணீர் கிடைத்தால் போதுமானது. தற்போது, நீடாமங்கலம் தவிர வேறு எந்த பகுதிக்கும் தண்ணீர் தேவையில்லை.

எனவே, காவிரியில் தற்போது திறக்கப்படும் தண்ணீரை, மோட்டார் பம்புசெட்களை மட்டுமே நம்பி குறுவை சாகுபடி செய்துள்ள திருவையாறு, மயிலாடுதுறை போன்ற பகுதிகளுக்கு திறந்துவிட்டால், அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

மேலும், தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீரை திருவாரூர், நாகை மாவட்டங்களின் கடைமடை பகுதி வரை கொண்டு செல்ல வேண்டும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். வாய்ப்புள்ள ஏரிகளில் மட்டும் தண்ணீரை நிரப்பலாம். குளம், குட்டைகளில் தண்ணீரை நிரப்ப நினைத்து, ஊருக்குள் கொண்டுவந்தால், திருவாரூர், நாகை மாவட்டங்களில் நேரடி விதைப்பு பணி முற்றிலும் பாதிக்கப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முதலை முத்துவாரி, பேய்வாரி போன்ற மிகப்பெரிய நீர்த் தேக்கங்களை அரசு தயார் நிலையில் வைத்திருந்தால் இதுபோன்ற காலகட்டங்களில் தண்ணீரை தேக்கிவைத்து, பின்னர் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில கொள்கை பரப்புச் செயலாளர் நாகை எஸ்.ஆர்.தமிழ்ச்செல்வன்: மேட்டூர் அணையில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர்உரிமை நீர் அல்ல, உபரி நீர். மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், டெல்டாவில் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் ஒரே நேரத்தில் மேற்கொள்ள உள்ளனர்.

எனவே,சம்பா சாகுபடிக்கு தேவையானவிதைநெல், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்ய வேண்டும். தற்போது நடைபெற்றுவரும் அனைத்து தூர் வாரும் பணிகள் மற்றும் பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதை வரவேற்று, நாகையில் தனபாலன் தலைமையில் விவசாயிகள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் வேளாண்துறை உள்ளிட்ட 6 துறைகளை இணைத்து உடனடியாக சாகுபடிக்கான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். 18 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா சாகுபடி பணிகளை முடுக்கி விட வேண்டும். சம்பா சாகுபடிக்கான ஆயத்த பணிகளை தமிழக அரசு தொடங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்