மேட்டூர் அணை வேகமாக நிரம்புவதால் வெள்ள கட்டுப்பாட்டு மையம் திறப்பு

By த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நாளை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 45 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் அணை நிலவரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கபினி, கேஆர்எஸ் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரில் கடந்த 2 வாரங்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு நீர்வரத்து இன்று காலை விநாடிக்கு நீர்வரத்து 1,34,115 கன அடியாகவும், மதியம் 1,47,896 கன அடியாகவும் இருந்த நிலையில், மாலையில் நீர்வரத்து 1,51,511 கன அடியாக உயர்ந்தது.

அணையின் நீர்மட்டம் இன்று காலை 107.69 அடியாக இருந்த நிலையில் மாலை 110.76 அடியாக உயர்ந்தது. அதேபோல், நீர் இருப்பு 75.16 டிஎம்சியாக இருந்த நிலையில், 79.49 டிஎம்சியாக உயர்ந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12,000 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்ட வாய்ப்புள்ளது. அணை நிரம்பினால், உபரி நீரை வெளியேற்றவும், காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்தால், அதனைக் கண்காணிக்கவும் நீர்வளத்துறை சார்பில், அணை வளாகத்தில் வெள்ள நீர் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால், அணை முழுகொள்ளளவை நாளை (29-ம் தேதி) எட்ட வாய்ப்புள்ளது. நீர்வரத்தை கண்காணிக்க அணையின் 16 கண் மதகு பகுதியில் வெள்ளக் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 5 உதவி பொறியாளர்கள் தலைமையில் 45 பேர் கொண்ட குழுவினர் 24 மணி நேரமும் வெள்ள நிலவரத்தைக் கண்காணித்து வருகின்றனர்.

அணை நிரம்பியதும், 1 மணி நேரத்துக்கு ஒருமுறை வெள்ள நிலவரம் கண்காணிக்கப்பட்டு, தேவைக்கேற்ப உபரிநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE