‘‘மம்தா பானர்ஜியை பேசவிடாமல் தடுத்தது கண்டனத்துக்கு உரியது’’: ப.சிதம்பரம்

By கே.சுரேஷ்

புதுக்கோட்டை: டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கூடுதல் நேரம் பேசவிடாமல் தடுத்தது கண்டனத்துக்கு உரியது என மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி. விமர்சித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.1.25 கோடியில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டது. ஆட்சியர் எம்.அருணா தலைமையில் இன்று (ஜூலை 28) நடைபெற்ற திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ப. சிதம்பரம், "எதிர்க்கட்சி உறுப்பினர்களை நாடாளுமன்றத்திலும் பேச விடுவதில்லை. அதேபோல, நிதி ஆயோக் கூட்டத்திலும் பேச விடுவதில்லை. ஏதாவது பேசினால் வழக்கு போடுவது. இதெல்லாம் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் செயலாகும்.

நிதி ஆயோக் கூட்டத்தில், ஒரு மாநிலத்தின் முதல்வரான மம்தா பானர்ஜி 5 நிமிடம் பேசி இருக்கிறார். அவர் 10 நிமிடம் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது?. ஏன் கூடுதலாக பேசுவதற்கு அனுமதிக்கக் கூடாது?. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் நடத்தப்பட்ட தேசிய வளர்ச்சிக் குழு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான குழுக் கூட்டத்தில், குஜராத்தில் முதல்வராக இருந்த நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

முன்வரிசையில் அமர்ந்து 15-ல் இருந்து 25 நிமிடம் பேசியிருக்கிறார். அந்த சித்திரம் எனக்கு பளிச்சென்று நினைவில் இருக்கிறது. அப்போது, அவரை யாரும் குறுக்கிடவில்லை. நிறுத்தவும் செய்யவில்லை. எதிர்க்கட்சி முதல்வரை பேசவிடாமல் தடுப்பது கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் பழக்கம் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து இன்னும் விடவில்லை என்பது தெரிகிறது" என கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE