‘‘தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம்’’ - மத்திய அரசுக்கு தமிழக காங்கிரஸ் கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: "ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் மத்திய பாஜக அரசு பாரபட்சமாக செயல்பட்டிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்." என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை விடுத்துள்ள அறிக்கையில், "தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கை அப்பட்டமான அரசியல் பாகுபாடு காரணமாக இண்டியா கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்கிற தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளன. இதனை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ், திமுக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளன. முன்பெல்லாம் ரயில்வே துறைக்கென்று தனி படஜெட் நீண்டகாலமாக தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அதன் மூலம் எந்தெந்த மாநிலங்களுக்கு எந்தெந்த திட்டங்கள், எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்கிற விபரங்கள் வெளிவரும்.

ஆனால் ரயில்வே துறைக்கென தனி பட்ஜெட் ரத்து செய்யப்பட்டு பொது படஜெட்டோடு இணைக்கப்பட்டு தற்போது ரூ.2.65 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது என்கிற விபரம் தான் வெளிவந்தது. எதற்கு எவ்வளவு நிதி என்கிற விபரங்கள் தற்போது தான் வெளிவந்துள்ளது.

அதன்மூலம், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மொத்த ஒதுக்கீட்டில் 3.49 சதவீதமாகும். ஆனால் மத்திய பிரதேசத்திற்கு ரூ.14,738 கோடியும் (8.08%), குஜராத்துக்கு ரூ. 8,743 கோடி (4.79%) உத்திர பிரதேசம் ரூ. 19,848 கோடி (10.88%), ராஜஸ்தான் ரூ.9,959 கோடி (5.46%), மகாராஷ்டிரா அதிகபட்சமாக ரூ.15,940 கோடி (8.74%) பிஹார் ரூ. 10,033 கோடி (5.50%) ஆந்திரா ரூ.9,151 கோடி (5.05%) என ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் மத்திய பாஜக அரசு பாரபட்சமாக செயல்பட்டிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

ஏற்கனவே அறிவித்து புறக்கணிக்கப்பட்ட நிலையில் நெல்லை - மயிலாடுதுறை தினசரி ரயில், தூத்துக்குடி - கோவை தினசரி இரவு நேர ரயில், தூத்துக்குடி - சென்னை பகல்நேர தினசரி ரயில், நாகர்கோயில் - மங்களூர் ஏரநாடு தினசரி ரயில், தாம்பரம் - செங்கோட்டை அந்தியோதயா ரயில், மதுரை - விழுப்புரம் ரயில், மதுரை - திண்டுக்கல் இடையே ரத்து, திருச்சி - மானாமதுரை ரயில், காரைக்குடி - மானாமதுரை இடையே ரத்து, திருச்சி - காரைக்கால் வழித்தடத்தில் இயங்கிய மூன்று ரயில்களில் தற்போது ஒரே ஒரு ரயில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

செங்கோட்டை - கொல்லம் பாசஞ்சர் ரயில் முழுவதுமாக ரத்து, நெல்லை - கொல்லம் இடையே தென்காசி வழியாக இயக்கப்பட்ட மீட்டர்கேஜ் பாதையில் தினமும் நான்கு ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது ஒரு ரயில் கூட இயக்கப்படவில்லை. திருவாரூர் - பட்டுக்கோட்டை, அறந்தாங்கி பகுதியில் மீட்டர்கேஜ் பாதையில் சென்னைக்கு இயக்கப்பட்ட ரயில் இயக்கப்படவில்லை. ஏற்கனவே ஓடிக்கொண்டிருந்த பல ரயில்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பொதுவாக ரயில்வே அமைச்சகமானது மக்கள் தொகை கணக்கீட்டை கொண்டு மாநிலங்களுக்கான ரயில்கள் எணிக்கையை கணக்கீடு செய்கிறது. அதாவது 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் எவ்வளவு ரயில் பாதைகள் இருக்கின்றன என்பது கணக்கிடப்படுகிறது. தமிழகம் தற்போது 32.07 என்ற அடர்த்தி அளவிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், வரி வருவாயிலும் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஆனால் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல ரயில்வே திட்டங்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக நிதி ஒதுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் ஏற்கனவே செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படாமலும், குறைத்தும் வழங்கப்பட்டிருக்கின்றன. அதன்படி ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் திண்டிவனம் - செஞ்சி, திருவண்ணாமலை புதிய வழித்தடம் 70 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்க ரூ. 267 கோடி திட்ட மதிப்பீட்டில் 2006 - 2007 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இத்திட்டத்திற்கான தற்போதைய மதிப்பீடு ரூ. 900 கோடி.

இத்திட்டத்துக்கு கடந்த 2017-18 முதல் 2024 - 25 வரை மொத்தம் ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 192 கோடி தான். இதனால் இந்த திட்டம் ஆமை வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது. வேலூர் மாவட்டம் அத்திப்பட்டுவில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக புத்தூருக்கு 88.30 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்க 2008 - 09 ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.528 கோடி ஆகும். ஆனால் இதற்கு இதுவரை ஒதுக்கப்பட்ட தொகை ரூ.108 கோடி ஆகும். இதற்கு இதுவரை ஒப்பந்தப்புள்ளி கோரப்படாமல் முடக்கப்பட்டுள்ளது.

அதேபோல திண்டிவனம் - நகரி வழித்தடம் ரூ 582 கோடி செலவில் அமைக்க 2006 - 07 பட்ஜெட்டில் அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த திட்டமும் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல் முழுமையாக நிறைபெறவில்லை. அதேபோல ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி ரயில் பாதை ஆவடி வழியாக 60 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்க 2012 - 13ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு போதிய நிதி ஒதுக்காததால் திட்டம் நிறைவு பெறாமல் உள்ளது.

சென்னையில் இருந்து மகாபலிபுரம் - மரக்காணம், புதுச்சேரி வழியாக கடலூர் துறைமுகம் வரை 178.28 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ. 523.52 கோடி மதிப்பில் புதிய இரயில் பாதை அமைக்க 2008-09 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு போதிய நிதி ஒதுக்காததால் திட்டம் முடங்கிய நிலையில் உள்ளது. அதேபோல ஈரோடு - பழனி வழித்தடம் 91.05 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்க 2008-09 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் திட்ட மதிப்பீடு ரூ. 1,140 கோடி என அறிவிக்கப்பட்டது. அத்திட்டமும் செயல்படுத்தப்படாமல் உள்ளது.

மதுரை - தூத்துக்குடி திட்டத்திற்கு ரூ. 2,053 கோடி மதிப்பில் 142.5 கிலோம்மீட்டர் தூரத்திற்கு 2011 -12 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு கடந்த 8 ஆண்டுகளில் ரூ.350 கோடி தான் நிதி ஒதுக்கப்பட்டு திட்டம் முழுமை பெறாமல் உள்ளது. மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்குவதில் மத்திய பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் எந்த அளவுக்கு பாரபட்சப் போக்கை கடைப்பிடித்து தமிழக ரயில்வே திட்டங்களில் வஞ்சித்து வருகிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

நேற்று பொது நிதிநிலை அறிக்கையில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதற்காக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். தற்போது ரயில்வே திட்டங்களில் தமிழகம் எந்த அளவுக்கு பாரபட்சமாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் கடுமையான எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

கடந்த 10 ஆண்டுகால மக்கள் விரோத நடவடிக்கையின் காரணமாகவும், பாசிச போக்கினாலும் பாஜகவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காமல் மக்கள் பாடத்தை புகட்டியிருக்கிறார்கள். இரு மாநில கட்சிகளின் ஆதரவோடு மைனாரிட்டி அரசு நடத்திவரும் பிரதமர் மோடி தொடர்ந்து மக்களை அரசியல் ரீதியாக பிளவுபடுத்தி பாரபட்சமாக நிதி ஒதுக்கீடு செய்வாரேயானால் அதற்குரிய பாடத்தை மக்கள் நிச்சயம் மீண்டும் புகட்டுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்