உள்நாட்டுப் போரின்போது 1992-ல் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டு இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த இரணைத்தீவில், 26 ஆண்டுகளுக்குப் பின் மக்கள் மீண்டும் குடியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வட மாகாணத்தில் வரலாற்று பாரம்பரியம் கொண்ட தீவுகளில் இரணைத்தீவும் ஒன்றாகும். கிளிநொச்சி மாவட்டம், இரணைமாதா மீன்பிடித் துறையிலிருந்து 40 நிமிடம் படகுப் பயணம் மூலம் இரணைத்தீவை அடையலாம். இரட்டைத் தீவுகளைக் கொண்டதால், இதற்கு இரணைத்தீவு என்ற பெயர் உண்டானது. சுமார் 6 கி.மீ சுற்றளவைக் கொண்ட இரணைத்தீவின் தீவுகளில் ஒன்றை சிறுதீவு என்றும், மற்றொன்றை பெருந்தீவு எனவும் அவ்வூர் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில் இரணைத்தீவு முத்துக்குளிப்புக்கும், சங்கு குளிப்புக்கும் பெயர் பெற்றிருந்தது. போர்த்துகீசியர்களின் காலத்தில் பதினாறாம் நூற்றாண்டில் இரணைத்தீவில் கட்டப்பட்ட புனிதமேரி ஆலயமும், 1886-ம் ஆண்டில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் இன்னும் அங்கு உள்ளது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது 1992-ம் ஆண்டில் இரணைத்தீவில் வசித்து வந்த சுமார் 200 குடும்பங்களும் தீவிலிருந்து வெளியேற்றப்பட்டு கடந்த 26 ஆண்டுகளாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள தற்காலிக முகாம்களில் வசித்து வந்தனர்.
1.5.2017-ல் தொடங்கி, கடந்த ஓராண்டாக இரணைத்தீவில் தங்கள் சொந்த நிலத்தில் மீள்குடியேற்றம் செய்ய வலியுறுத்தி கிளிநொச்சி மாவட்டத்திலும், கொழும்பிலும் தொடர் போராட்டங்களை இரணைதீவு மக்கள் நடத்தி வந்தனர். இந்தப் போராட்டங்களின் விளைவாக இரணைதீவு மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் பல கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. தொடர் போராட்டம் ஓராண்டை எட்டும் தருணத்தில் (359-ம் நாள் போராட்டத்தின்போது) 23.4.2018-ல் 50 படகுகளில் வெள்ளைக் கொடிகளை ஏந்தி இரணைத்தீவில் தமிழ் மக்கள் இறங்கினர்.
1992-ம் ஆண்டில் இரணைத்தீவிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டபோது அங்கு பள்ளி, மருத்துவமனை, நூலகம், தபால் நிலையம், மீன்பிடி இறங்குதளம் ஆகியன இருந்தன. 26 ஆண்டுகள் கழித்து தங்களின் சொந்த மண்ணில் கால் வைத்துள்ள இரணைத்தீவு மக்கள் தற்காலிக குடில்களிலும், உள்நாட்டுப் போரின்போது குண்டு வீசப்பட்டு சேதமடைந்து கைவிடப்பட்ட கட்டிடங்களிலும் வசிக்கத் தொடங்கி உள்ளனர். மேலும், தங்களுக்குச் சொந்தமான நிலத்தை ஒப்படைக்குமாறு வலியுறுத்தி அங்கு உள்ள புனித மேரி ஆலய வளாகத்தில் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இலங்கை மீள்குடியேற்ற அமைச்சக செயலாளர் பி.சுரேஸ், இலங்கை பாதுகாப்பு அமைச்சக செயலாளர் ஆர். ராஜபக்ச, இலங்கையின் கடற்படை தளபதி எஸ்.எஸ்.ரணசிங்க தலைமையிலான குழுவினர் இரணைத்தீவில் கடந்த வாரம் ஆய்வு செய்தனர். அப்போது, தமிழர்களின் நிலங்கள் அடையாளம் காணப்பட்டு விரைவில் குடியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.
விரைவில் நிலம் ஒப்படைப்பு
இரணைத்தீவில் ஆய்வு செய்த பின்பு இலங்கை மீள்குடியேற்ற அமைச்சக செயலாளர் பி.சுரேஸ், செய்தியாளர்களிடம் கூறியபோது, “இரணைத்தீவில் வசித்துவந்த மக்களின் நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், விரைவில் அவர்களின் நிலங்களில் 190 குடும்பங்கள் குடியேற்றப்படும். இரணைத்தீவில் கடற்படையினர் 8 ஏக்கர் நிலத்தில் நாட்டின் பாதுகாப்பு, கடத்தலை கட்டுப்படுத்தல், மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக தொடர்ந்து தங்கி இருப்பார்கள்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago