மேட்டூர் உபரிநீர் திட்டத்தில் ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கப்படுமா? - விவசாயிகள் காத்திருப்பு

By த.சக்திவேல்

மேட்டூர்: கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. எனவே, மேட்டூர் உபரிநீர் திட்டத்தின் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கப்படுமா, என விவசாயிகள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

மேட்டூர் அணை வெள்ள உபரிநீரைக் கொண்டு, சரபங்கா வடி நிலக்கோட்டத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகளை நிரப்பும் வகையில் ரூ.565 கோடியில் 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன. இத்திட்டம் நிறைவேறும் போது நங்கவள்ளி, வனவாசி, மேச்சேரி, தாரமங்கலம், எடப்பாடி, சங்ககிரி, கொங்கணாபுரம் பகுதிகளில் 4,238 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதற்காக அணையில் இருந்து 0.60 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். திப்பம்பட்டி, வெள்ளாளபுரம், கன்னந்தேரி உள்ளிட்ட பகுதிகளில் நீரேற்று நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டு மேட்டூர் அணை நிரம்பிய போது, வெள்ள உபரிநீர் திட்டத்தில் முதல்கட்டமாக பணிகள் முடிவுற்ற ஏரிகளுக்கு திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து நீர் கொண்டு செல்லப்பட்டு 4 ஏரிகள் நிரம்பின. இதனிடையே, தொடர்ந்து உபரி நீர் திட்டப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த, மின்சாரம் உள்ளிட்ட வற்றுக்கு கூடுதலாக ரூ.108 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேட்டூர் உபரி நீர் திட்டப் பணிகள் 4 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வரும் நிலையில் எப்போது முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக, அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து, கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால், கடந்த 2 வாரங்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 94 அடியை கடந்துள்ளது.

தொடர்ந்து, கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால், மேட்டூர் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது. அணையில் இருந்து நீர் திறக்கவும் வாய்ப்புள்ளது. அப்போது, மேட்டூர் உபரிநீர் திட்டத்தின் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கப்படுமா என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். இது குறித்து காவிரி உபரிநீர் நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் தம்பையா, கூறியதாவது: மேட்டூர் அணை நீர்மட்டம் விரைவில் முழு கொள்ளளவை எட்டவுள்ளது. அப்போது, வெளியேற்றப்படும் நீரை, உபரிநீர் திட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ள உபரிநீர் திட்டத்தில் கால்வாய் இணைப்பு, பைப்லைன் இணைப்பு உள்ளிட்ட பணிகள் முடிவடையாமல் உள்ளன. இதனை விரைந்து முடித்து தண்ணீர் வழங்க வேண்டும்.

நங்கவள்ளி, எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகள் வறட்சியான பகுதி என்பதால், நடப்பாண்டில் அணை நிரம்பும் போது, ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கி, பசுமையான பகுதியாக மாற்ற வேண்டும் என்றார்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் தங்கராஜ் கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளாக உபரிநீர் திட்டப் பணிகள் முடிவடையாமல் உள்ளன. இதனால், ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கததால் விளைநிலங்கள் பயன்பாடின்றி வறட்சியை எதிர்நோக்கியுள்ளன. நடப்பாண்டில், மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் போது, வெள்ள உபரிநீரை ஏரிகளுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: திப்பம்பட்டி, வெள்ளாளபுரம், கன்னந்தேரி, நங்கவள்ளி ஆகிய நீரேற்று நிலையங்களில் பணிகள் முடிவடைந்துள்ளன. ஒரு சில இடங்களில் ஏரிகளுக்கு இணைப்பு பணிகள் நடக்கின்றன. இந்த பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை முழுமையாக நிரம்பும் போது, உபரிநீர் திட்டத்தில் 80 சதவீதம் ஏரிகளுக்கு முழுமையாக தண்ணீர் வழங்க முடியும். தற்போது, நீரேற்று நிலையங்களில் மின்மோட்டார்கள், இயந்திரங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE