“முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது அரசியல்” - ஜி.கே.வாசன்

By ஆர்.ஆதித்தன்

கோவை: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் முதல்வர் புறக்கணித்ததற்கு காரணம் அரசியலே என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

கோவை சித்ரா பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கட்சியின் துணைத் தலைவர் விடியல் சேகர், பொதுச் செயலாளர் யுவராஜா ஆகியோர் பங்கேற்றனர்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வாசன், “தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 2026 தேர்தல் வியூகத்தின் அடிப்படையில், இயக்கத்தில் பொறுப்புகளில் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று கோவை மண்டலத்தின் மறுசீரமைக்கப்பட்ட இயக்க நிர்வாகிகளுடன் கூட்டம் நடைபெறுகிறது. நேற்று சென்னை மண்டலத்தில் துவங்கினேன்.

நாளை காலை மதுரை மண்டல கூட்டம் நடைபெற உள்ளது. நாளை மாலை திருச்சி மண்டல கூட்டம் நடைபெறுகிறது. நான்கு மண்டல கூட்டங்கள் நாளையோடு நிறைவடைகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வருகின்ற 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாரவதற்கான பணிகளை, இயக்க வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்வது தொடர்பாக இந்த மறுசீரமைப்பு கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட தலைமை என மாற்றி கட்சி மறு சீரமைக்கப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பில் கட்சியில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இளைஞர் அணியை வலுப்பெறச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் நான்கு மண்டலங்களைப் பிரித்து நான்கு தலைவர்களை அறிவித்துள்ளோம். எல்லா மண்டலத்திலும் இளைஞர்களை வலுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்தப் பணிகளை மேற்கொண்டுள்ளோம். இதேபோல் மகளிருக்கும் இளைஞர் அணியில் முக்கிய பதவிகள் கொடுத்துள்ளோம். விவசாய அணி, வர்த்தக அணி உட்பட ஏராளமான அணி பொறுப்புகளில் இளைஞர்களை நியமித்துள்ளோம்.

மூன்று தலைமுறை கண்ட கட்சியாக தமாகா உள்ளது. ஆனால், நேர்மை, எளிமை, தூய்மை என்ற அடிப்படையில் செயல்படுவதால் எங்களுக்கு பொருளாதார நெருக்கடி உள்ளது. பெரும்பாலான வாக்காளர்கள் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு குறைகளை நிறைவேற்றுவார் என்ற எண்ணத்தின் அடிப்படையில் முதல்வருக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் துரதிருஷ்டவசமாக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க தவறியவர் தமிழக முதல்வராக உள்ளார்.

முதல்வர் பேசும்போது மதுரை எய்ம்ஸ் பற்றி பேசுகிறார், மெட்ரோ ரயில் திட்டம் பற்றி பேசுகிறார். இவற்றுக்கு, வரும் நாட்களில் மத்திய அரசு நிதி ஒதுக்கும் என நம்புகிறோம். அது அவர்களது கடமை. என்றபோதும் முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் அமர்ந்து நேரடியாக கேள்விகளைக் கேட்டிருக்க வேண்டும். அதைத்தான் மக்களும் எதிர்பார்க்கின்றனர். அதைவிடுத்து நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் தவிர்த்ததுக்கு காரணம் அரசியல் வாக்கு வங்கி தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

நிதி ஆயோக் கூட்டம் என்பது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடக்கக்கூடிய ஒன்று. அதில் தமிழகத்தின் அழுத்தமான ஆலோசனைகளை, தேவைகளை எடுத்துக் கூறக்கூடிய ஒரே பிரதிநிதி முதல்வராகத்தான் இருக்க முடியும். அதை அவர் செய்ய தவறியிருக்கிறார். இதில் அரசியல் செய்யக்கூடாது. நிதி ஆயோக்கில் அரசியல் தேவையில்லை.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டத்திற்கு செல்கிறார். ஜார்க்கண்ட் முதல்வர் செல்கிறார். தனது மக்களுக்காகவும் மாநிலங்களுக்காகவும் அவர்கள் செல்கின்றனர். மேற்குவங்க முதல்வர் மம்தாவிற்கும் மத்திய அரசுக்கும் கருத்து வேறுபாடு அதிகமாகவே உள்ளது. எனவே, மக்கள் பிரச்சினையில் அரசியலைப் புகுத்தக்கூடாது. தமிழக முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தை தவிர்த்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழக மக்களுக்கு உங்களது கடமையை நீங்கள் செய்யவில்லை என குற்றம் சாட்டுகிறோம்.

அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு பாகுபாடின்றி நிதி ஒதுக்கி கொண்டிருக்கிறது. அதைத் தாண்டி எந்தெந்த திட்டங்களுக்கு அதிகம் தேவையோ அந்தத் திட்டங்களுக்கு படிப்படியாக எல்லா மாநிலங்களுக்கும் மத்திய அரசு நிதி வழங்கிக் கொண்டிருக்கிறது. ஒரே பட்ஜெட்டில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் குறிப்பிட்டு அனைத்து மாநிலத்துக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்றால், அது பாஜகவுக்கு மட்டுமல்ல காங்கிரஸுக்கும் சாத்தியமில்லை. இதற்கு முன்பு இருந்தவர்களும் இதை செய்ததில்லை.

திமுக இன்று ஆர்ப்பாட்டம் செய்வதற்கு காரணம் முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாதது தப்பு எனும் மக்களின் கருத்தை மறக்கக்கடிக்கவே. தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் பிரதமர் தலைமையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நல்லரசாக செயல்படும் மத்திய அரசு இந்தியாவை வல்லரசாக மாற்றக்கூடிய நல்ல சூழலை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையோடு பெரும்பாலான மக்கள் வாக்களித்துள்ளனர்.

எனவே, வளமான தமிழகமும், வலிமையான பாரதமும் ஏற்பட பிரதமர் தலைமைக்கு தமிழக கட்சிகள் துணை நின்று வளமான தமிழகத்தை உருவாக்க 2026-இல் வழி வகுக்க வேண்டும் என்பதுதான் எங்களின் வேண்டுகோள்.மின் கட்டணம் தொடர்ந்து மூன்று முறை உயர்த்தப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட கொங்கு மாவட்டங்கள் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. சிறு தொழில்கள், கைத்தறி, விசைத்தறி போன்றவை மிகப்பெரிய அளவில் மின்சாரக் கட்டண உயர்வால் பாதிப்படைந்துள்ளன. எனவே, மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

கீழ்பவானி பாசன பகுதியில் வாய்க்கால் பணிகளை சீரமைத்து ஒவ்வொரு ஆண்டு போல் இம்முறையும் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் எல்அண்ட்டி பைபாஸ் சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.

சிங்காநல்லூர் பேருந்து நிலையத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்ட வேண்டும். சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் பற்றி முறையாக சரியாக உண்மை நிலையை வெளிப்படுத்தி மாணவர்களுக்கு எந்தவித அசவுகரியமும் இல்லாமல் பார்த்துக் கொள்வது அரசின் கடமை” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்