சம்பா சாகுபடிக்கு தேவையான விதைகள், உரம், பயிர்க்கடனுக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்: அன்புமணி

By செய்திப்பிரிவு

சென்னை: மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வரும்நிலையில், காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யப்படுவதற்கு வசதியாக வேளாண் துறை அலுவலகங்கள் வாயிலாக விதை நெல்கள், கூட்டுறவு சங்கங்கள் மூலமாக உரங்கள் மற்றும் பயிர்க்கடன் கிடைப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காவிரி நீர்ப்படிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் நிரம்பி வழிவதால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 80 ஆயிரம் கன அடியாக அதிகரித்திருக்கிறது. அணையின் நீர்மட்டம் 100 அடியைத் தாண்டி விட்ட நிலையில், அடுத்த சில நாட்களில் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில், வெள்ள ஆபத்தை தடுக்கும் வகையிலும், காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாடுகளை தொடங்கும் வகையிலும், அணை நிரம்பும் வரை காத்திருக்காமல் உடனடியாக தண்ணீர் திறக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

கர்நாடக அணைகளில் இருந்து கடந்த ஜூலை 16-ஆம் நாள் வரை தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. அதன் பின், அடுத்த இரு வாரங்களில் அணை நிரம்பும் சூழல் உருவாகும்; அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை.

அதனால், குறுவை சாகுபடிக்கே தண்ணீர் இல்லாமல் தவித்த காவிரி பாசன மாவட்ட விவசாயிகள், சம்பா சாகுபடியை தொடங்குவது குறித்து நினைத்துக் கூட பார்க்கவில்லை. மேட்டூர் அணை அடுத்த ஓரிரு நாட்களில் திறக்கப்படவுள்ள நிலையில், அதை பயன்படுத்தி காவிரி பாசன மாவட்டங்களில் மிக அதிக பரப்பளவில் சம்பா சாகுபடி செய்வதற்கான வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும்.

காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் குறைந்தது 13 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்குத் தேவையான உரம், விதை நெல் உள்ளிட்ட இடுபொருட்கள் வேளான் துறை அலுவலகங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ போதிய அளவில் இருப்பு இல்லை.

காவிரி பாசனக் கால்வாய்கள் முழுமையாக தூர்வாரப்படாததால், கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேருவதற்கும் வாய்ப்பில்லை. அதனால், தண்ணீர் திறந்து விட்டாலும் கூட போதிய பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்படுவது சாத்தியமற்றதாகி விடும்.

இவை அனைத்துக்கும் மேலாக சம்பா சாகுபடி பணிகளைத் தொடங்க குறைந்தது ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகும். ஆனால், கடந்த ஆண்டு சம்பா, குறுவை ஆகிய இரு பருவங்களிலும் நெல் சாகுபடி தோல்வியடைந்ததால், பெரும்பான்மையான விவசாயிகளிடம் பணம் இல்லை.

இதையும் தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யப்படுவதற்கு வசதியாக வேளாண் துறை அலுவலகங்கள் வாயிலாக விதை நெல்கள், கூட்டுறவு சங்கங்கள் மூலமாக உரங்கள் மற்றும் பயிர்க்கடன் கிடைப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்