அதிமுக பொது செயலாளர் என குறிப்பிட்டு பழனிசாமி எப்படி மனு தாக்கல் செய்யலாம்? - உயர் நீதிமன்றம் கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பதவி தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பழனிசாமியை பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு எப்படி மனு தாக்கல் செய்யலாம் என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக் குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகின்றன.

இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பி.ராஜலட்சுமி, இளம்பாரதி ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

அந்த வழக்கில் பழனிசாமிதன்னை இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையிலேயே மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் தற்போது அதிமுக பொதுச் செயலாளர் எனக்கூறி பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதை எப்படி நீதிமன்றம் அனுமதித்தது என வாதிட்டனர்.

அதையடுத்து நீதிபதி, அதிமுகபொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எனக்குறிப்பிட்டு எப்படி மனுத்தாக்கல் செய்ய முடியும், இதை எப்படி பதிவுத்துறையும் அனுமதித்தது, இதுதொடர்பாக நீதிமன்றம் எதுவும் அனுமதியளித்துள்ளதா என பழனிசாமி தரப்புக்கு கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தார்.

அதற்கு பழனிசாமி தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக திருத்த மனுவை தாக்கல் செய்ய பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை ஆக.7-க்கு தள்ளிவைத்துள்ளார்.

இபிஎஸ் தரப்பு விளக்கம்: இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளரான ஐ.எஸ்.இன்பதுரை கூறியதாவது:

அதிமுக பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளர் என்பதை உச்ச நீதிமன்றமும் இந்திய தேர்தல் ஆணையமும் உறுதி செய்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இந்த மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தபோது பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

தற்போது அவர் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். அப்படி இருக்கும்போது இணை ஒருங்கிணைப்பாளர் எனக்கூறி இந்த வழக்கில்பதில் மனு தாக்கல் செய்வது சரியாக இருக்காது என்பதால்தான் பொதுச்செயலாளர் எனக்குறிப்பிட்டு பதில் மனுவை தாக்கல் செய்தோம்.

இந்த வழக்கில் நீதிபதி, எதிர்மனுதாரரான பழனிசாமியை இணை ஒருங்கிணைப்பாளர் என மனுவில் குறிப்பிட்டு இருக்கும்போது, பொதுச்செயலாளர் எனக்குறிப்பிட்டு எப்படி பதில் மனு தாக்கல் செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கான விளக்கத்தை நாங்கள் எடுத்துச் சொன்னபோது, அப்படியானால் இணை ஒருங்கிணைப்பாளர் என இருப்பதை பொதுச்செயலாளர் என மாற்றம் செய்து திருத்த மனுவை தாக்கல் செய்யுங்கள் என்றுதான் அறிவுறுத்தினார். அதன்படி, உடனடியாக திருத்த மனுவை தாக்கல் செய்ய உள்ளோம். இவ்வாறு தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE