நிதி ஆயோக் கூட்டத்தில் ‘ஆப்சென்ட்’ - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திடீர் முடிவு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: நிதி ஆயோக் கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை. பட்ஜெட்டுக்கு பிறகு ஆகஸ்ட் இறுதியில் டெல்லி சென்று அவர் பிரதமரை சந்திக்கவுள்ளதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நிதி அயோக் கூட்டம் நாளை (ஜூலை 27) நடக்கிறது. வழக்கமாக டெல்லியில் நடைபெறும் கூட்டங்களில் முதல்வர்களுக்கு பதிலாக அமைச்சர்கள் பங்கேற்பது வழக்கம்.

இந்த முறை நிதி அயோக் கூட்டத்தில், மாநில முதல்வர்கள் தவறாது கலந்து கொள்ளும்படி நிதி அயோக் அமைப்பு கடிதம் அனுப்பியது. புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு பதிலாக டெல்லியில் நடைபெறும் கூட்டங்களில் அமைச்சர் லட்சுமிநாராயணன் பங்கேற்பார். ஆனால் இம்முறை டெல்லி கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்பது பற்றி உறுதி செய்யாமல் இருந்தார். அவரிடம் கேட்டதற்கும் பதில் தரவில்லை. ஏனெனில் ஏற்கெனவே டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்திலும் ரங்கசாமி பங்கேற்காமல் இருந்தார்.

இந்த சூழலில் மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டியதாகக் கூறி நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளது.

அதைத்தொடர்ந்து புதுச்சேரியும் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டதால் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க அதிமுக வலியுறுத்தியது. இதனையடுத்து இம்முறை முதல்வர் ரங்கசாமி பங்கேற்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

இன்று மாலை அவர் டெல்லி புறப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் டென்னிஸ் விளையாடி விட்டு, ஆரோவில் சென்று டீ சாப்பிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அப்பா பைத்தியசாமி கோயிலுக்கு சென்றார். இரவு வரை அவர் புதுச்சேரியில்தான் இருந்தார். அதையடுத்து விசாரித்தபோது, டெல்லி செல்வதை அவர் தவிர்த்து விட்டதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வரின் நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்தபோது, ஆகஸ்ட் 2ம் தேதி புதுச்சேரி பட்ஜெட்டுக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கி ஒப்புதல் தந்துள்ளது. அதனால் நிதி ஆயோக் அவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு ஆகஸ்ட் இறுதியில் டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோரை முதல்வர் சந்திப்பார்" என்றனர்.

இதுபற்றி அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது, "புதுச்சேரி ஆளும் கூட்டணி அரசில் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி உள்ளது. இதில் பாஜக எம்எல்ஏக்கள் முதல்வருக்கு எதிராக போர்கொடி தூக்கி டெல்லி வரை சென்று புகார் தந்துள்ளனர். அத்துடன் மனைப் பட்டா வழங்க தடை தொடர்பாக புதுச்சேரி அரசை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரி பாஜக அமைச்சர் சாய் சரவணன் குமாரே வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் ஏற்பட்ட அதிருப்தியால் அவர் டெல்லி சென்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை" என்கின்றனர்.

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்பார் என பாஜக தரப்பில் எதிர்பார்த்த நிலையில் அவர் செல்லாமல் புறக்கணித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE