“அமலாக்கத் துறை முடக்கிய பொன்முடியின் சொத்துகளை அரசுடமையாக்க வேண்டும்” - வானதி சீனிவாசன் 

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: “அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடியின் ரூ.14 கோடி சொத்துகளை அரசுடமையாக்க வேண்டும்,” என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று (ஜூலை 26) இரவு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “திருவண்ணாமலைக்கு பல லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநில பக்தர்களும் அதிகளவில் வருகின்றனர். கிரிவல பாதையில் பக்தர்களுக்கான குடிநீர், கழிப்பறை வசதியை அதிகரிக்க வேண்டும். பவுர்ணமிக்கு மட்டும் கழிப்பறைகளைத் திறந்து வைக்கின்றனர். அனைத்து நாட்களிலும் திறந்து வைத்திருக்க வேண்டும். தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்.பக்தர்களுக்கு தங்கும் வசதி, அன்னதானம் வழங்க வேண்டும்.

ராஜகோபுரம் எதிரே நீதிமன்ற தடையாணையால், வணிக வளாகம் கட்டுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும். ராஜகோபுர தரிசனத்தை தடுக்கும் வகையில் திராவிட மாடல் அரசு இருக்கக் கூடாது. தமிழகத்தில் கோயில் குடமுழுக்கு விழாக்கள் பக்தர்களின் உண்டியல் காணிக்கையில் இருந்துதான் நடத்தப்படுகிறது. அரசின் பணத்தில் அல்ல. சனாதன தர்மத்துக்கும் இந்து மக்களுக்கும் எதிராக திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. இந்துக்களின் பண்டிகைக்கு வாழ்த்து கூறுவது கிடையாது.

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் ரூ.14 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. ஊழல் பணத்தை அரசுடமையாக்க வேண்டும். அமலாக்கத் துறையின் நடவடிக்கை தொடர்ச்சியாக இருக்கும். ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அது அதிமுகவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சட்டம் அனைவருக்கும் பொதுவானது. மத்திய அரசு நிதியை தங்களிடம் கொடுத்துவிட வேண்டும் என திமுக ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர்.

மத்திய பட்ஜெட் தொலைநோக்கு பார்வையுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முத்ரா திட்டத்தில் தொழில் தொடங்கியவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம். இத்திட்டத்தில் வழங்கப்படும் கடன் ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழர்கள் அதிகம் பயனடைவார்கள். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகத்தை திராவிட மாடல் ஆட்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். தமிழகத்தில் பால் விலை, மின்சார கட்டணம், சொத்து வரி, பத்திர பதிவு கட்டணத்தை திராவிட மாடல் அரசு உயர்த்தி உள்ளது. இந்திராவிலேயே தமிழகத்தில்தான் பட்டியலின மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இதையெல்லாம் மறைக்க பாஜக அரசை குறை கூறுகின்றனர். சமூக நீதி பேசுவார்கள். ஆனால் துணை முதல்வர் பதவி பட்டியலினத்தைச் சேர்ந்தவருக்கு கிடையாது. பெண்ணுரிமை என பேசினாலும், கோபாலபுரத்து குடும்ப பெண்ணான எம்பி கனிமொழிக்கு துணை முதல்வர் வாய்ப்பை தரமாட்டார்கள். தனது வாரிசான அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுப்பார்கள். அவருக்கு மூத்த அமைச்சர்களே புகழ்பாடும் நிலை உள்ளது” என்றார். அப்போது மாவட்டத் தலைவர் பாலசுப்ரமணியன், கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE