“மக்களவையில் மவுனம் காத்துவிட்டு போராட்டம் நடத்துவதா?” - திமுக கூட்டணிக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மக்களவையில் மவுனமாக இருந்துவிட்டு, தற்போது போராட்டம் நடத்துவதா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திமுக கூட்டணி கட்சி எம்பி-க்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக ஆட்சியில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல், கள்ளச்சாராய சம்பவங்கள் குறித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழக்கும் நிகழ்ச்சி வாடிப்பட்டியில் இன்று நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் எம்.காளிதாஸ் தலைமை தாங்கினார்.

மாவட்ட பாசறை துணைச் செயலாளர் எம்.கே.மணிமாறன் முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இ.மகேந்திரன், கருப்பையா மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.

துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: "தற்போது திமுக சார்பில் தமிழகத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். தமிழகத்தில் திமுக தான் ஆளும் கட்சியாக உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் உரிமைக்காக, முல்லை பெரியாறு உரிமைக்காக, கச்சத்தீவு தீர்வு காண, தமிழ்நாட்டுக்கு நிதியைப் பெற்றுத்தர, தமிழ்நாட்டுக்கு திட்டங்களை பெற்றுத்தரத்தான் திமுகவுக்கு மக்கள் வாக்களித்தார்கள்.

இதன் மூலம் திமுக கூட்டணியின் 39 எம்பி-க்கள் டெல்லிக்குச் சென்றனர். ஆனால், நம்பி வாக்களித்த மக்களுக்கு அவர்கள் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்கள் திமுக கூட்டணியின் 39 எம்பி-க்களால் தமிழகத்திற்கு ஒரு பைசா கூட நிதியைப் பெற்றுத் தர முடியவில்லை. பிஹார், ஆந்திரா போன்ற குறைவான எண்ணிக்கையில் எம்பி-க்களைக் கொண்ட மாநிலங்களுக்கு நிதி வாரி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கும் நிதி வேண்டும் என்று தமிழக எம்பி-க்கள் மக்களவையில் போர்க்குரல் எழப்பி இருக்க வேண்டும். ஆனால் அங்கெல்லாம் பேசாமல் மவுனமாக இருந்து விட்டு தற்போது தமிழகத்தில் திமுக ஆர்ப்பாட்டம் என்பது யாரை ஏமாற்ற? கடந்த 5 ஆண்டுகளிலும் திமுக கூட்டணி எம்பி-க்கள் தமிழகத்துக்காக எதையும் செய்யவில்லை. இனியும் செய்யப் போவதில்லை" என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE