கமண்டல நதியில் மிதந்து உடல்களை சுமக்கும் நிலை - தலைமுறைகளை கடந்தும் தொடரும் வேதனை!

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: படைவீடு அருகே கமண்டல நதியின் குறுக்கே பாலம் கட்டி கொடுக்காததால் உயிரிழந்தவர்களின் உடல்களை மார்பளவு தண்ணீரில் மிதந்து சுமக்க வேண்டிய நிலை தலைமுறைகளை கடந்து தொடர்வதாக கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உற்பத்தியாகி படைவீடு வழியாக ஆரணியை நோக்கி பாய்கிறது ‘கமண்டல நதி’. இந்த நதியின் குறுக்கே ஜவ்வாதுமலை அடிவாரத்தில் செண்பகத்தோப்பு அணை கட்டப்பட்டு, மழைநீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதனால், ஜவ்வாதுமலை அடிவார கிராமங்களை கடந்து செண்பகத்தோப்பு அணை வரை, ஆண்டு முழுவதும் கமண்டல நதியில் மார்பளவுக்கு தண்ணீர் இருக்கும்.

கமண்டல நதியில் தண்ணீர் இருப்பதை மலையடிவார கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளும், கிராம மக்களும் ஒருபுறம் வரவேற்றாலும், மறுபுறம் அவ்வப்போது வேதனைப்படும் நிகழ்வும் தொடர்கிறது. கமண்டல நதியின் குறுக்கே பாலம் கட்டப்படாததால், அத்தியாவசிய தேவைகள், மருத்துவ சிகிச்சை மற்றும் கல்வி கற்க, நதியை நீந்தி செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். வாழ்க்கையை வாழ்வதற்கு போராடும் அதே வேளையில், உயிர் துறந்த பிறகும் போராட வேண்டிய நிலை மலையடிவார கிராமங்களில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் தலைமுறை கடந்து தொடர்கிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை நதியின் நீரில் மிதந்தும், கடந்தும் சுமந்து சென்று இறுதி சடங்கு செய்யப்படுகிறது.

இந்நிலையில், சந்தவாசல் அடுத்த படைவீடு ஊராட்சியில் மல்லிகாபுரம் எனும் கிராமத்தில் வசித்த விவசாயி அருணாசலம்(76) என்பவர் சமீபத்தில் உயிரிழந்துள்ளார். அவரது உடலை, கமண்டல நதியில் சுமந்து சென்று, மறுகரையில் உள்ள மயானத்தில் உறவினர்களும் மற்றும் கிராம மக்களும் இறுதி சடங்கு செய்துள்ளனர். நதியில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால், உயிரிழந்தவரின் உடலுடன் அனைவரும் அடித்து செல்லப்பட்டு இருப்பார்கள். உயிரை பணயம் வைத்து, ஒவ்வொரு முறையும் சுமார் 60 அடி நீளத்துக்கு மார்பளவு உள்ள தண்ணீரில் மிதந்து சென்று, உயிரிழந்த நபர்களின் உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்படுகிறது.

இது குறித்து மல்லிகாபுரம் கிராம மக்கள் கூறும்போது, “கமண்டல நதிக் கரையையொட்டி மல்லிகாபுரம், கமண்டலாபுரம், இருளம்பாறை, ராமநாதபுரம் கொல்லைமேடு, நடுவூர், சீராக்கொல்லை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

யாரும் செவி சாய்க்கவில்லை: இக்கிராமங்களில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மளிகை, காய்கறிகள், கால்நடைகளுக்கு தீவனங்கள், விவசாயத்துக்கான உரங்கள் உள்ளிட்ட வாழ்வியல் தேவைகளுக்கும், கல்வி கற்கவும் கமண்டல நதியை கடந்து வர வேண்டியுள்ளது. மருத்துவ சிகிச்சைக்கும், இதுதான் எங்களுக்கு பாதை. நதியை கடந்து சென்றால் 2 கி.மீ., தொலைவில் உள்ள படைவீடு கிராமத்தை அடைந்துவிடலாம். சாமந்திபுரம் வழியாக மாற்று பாதையில் 7 கி.மீ., தொலைவு சுற்றிக்கொண்டு செல்ல வேண்டும்.

மல்லிகாபுரம், கமண்டலாபுரம், ராமநாதபுரம், கொல்லைமேடு குக்கிராம மக்களுக்கு கமண்டல நதியின் மறுகரையில் தனித்தனியே மயானம் உள்ளது. உயிரிழந்தவரின் உடலை கமண்டல நதியை கடந்து சென்று இறுதி சடங்கு செய்ய வேண்டும். மார்பளவு தண்ணீரில் உடலை சுமந்து செல்லும் நிலை தலைமுறைகளை கடந்தும் தொடர்கிறது. இதனால், ஆற்றின் குறுக்கே பாலம் கட்டிக்கொடுக்க வேண்டும் என்பது எங்களது தலையாய கோரிக்கையாகும்.

அரை நூற்றாண்டுகளை கடந்து ஆட்சி நடத்தும், இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியாளர்களிடம் பலமுறை வலியுறுத்திவிட்டோம். ஆனால், யாரும் செவி சாய்க்கவில்லை. ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை. சுதந்திர இந்தியாவில், உயிரிழந்தவர்களின் உடல்களை ஆற்று நீரில் சுமந்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது. இதற்கு தீர்வு காண, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என கூறி திராவிட மாடல் ஆட்சி நடத்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

உயிரை பணயம் வைத்து, ஒவ்வொரு முறையும் சுமார் 60 அடி நீளத்துக்கு மார்பளவு உள்ள தண்ணீரில் மிதந்து சென்று, உயிரிழந்த நபர்களின் உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE