புதுச்சேரியில் பட்ஜெட் தொடர் தொடங்குவதால் பாஜக அதிருப்தி எம்எல்ஏக்களை சமரசம் செய்ய இறுதி முயற்சி

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதால் பாஜக அதிருப்தி எம்எல்ஏ-க்களை சமரசம் செய்ய இறுதி முயற்சியாக பாஜக மேலிடப் பொறுப்பாளர் நாளை புதுச்சேரி வருகிறார்.

மக்களவைத் தேர்தல் தோல்வியால் புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கு இடையே மோதல் வலுத்தது. தேர்தல் தோல்விக்குப் பிறகு அரசின் செயல்பாடுகளையும் முதல்வர், பாஜக அமைச்சர்களுக்கு எதிராகவும் பாஜக எம்எல்ஏ-க்களில் ஒரு பிரிவினர் நேரடியாக குற்றம்சாட்டி போர்க்கொடி தூக்கினர். மேலும் இவர்கள் டெல்லியில் மத்திய அமைச்சர் மெக்வால், பாஜக தலைவர் நட்டா, அமைப்புச் செயலாளர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்து, முதல்வர் ரங்கசாமி, பாஜக அமைச்சர்கள் மீது புகார் தெரிவித்தனர். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து முறையிடவும் காத்திருந்தனர். ஆனால், அதற்கு நேரம் ஒதுக்கப்படாததால் புதுச்சேரிக்கு திரும்பினர்.

இதைத் தொடர்ந்து அதிருப்தி எம்எல்ஏ-க்களை சமரசப்படுத்த பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா புதுவைக்கு வந்தார். ஆனாலும் அதிருப்தியாளர்களை சமாதானம் செய்ய முடியாமல் அவரும் திரும்பினார். இதனிடையே புதுவை மாநில பாஜக செயற்குழுவில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடமும் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் புகார் தெரிவித்தனர்.

அடுத்தகட்டமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக மீண்டும் டெல்லிக்குச் சென்றனர். ஆனால், 3 நாட்கள் டெல்லியில் முகாமிட்டும் அமித் ஷாவை அவர்களால் சந்திக்க முடியவில்லை. இதனால் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் ஏமாற்றத்துடன் புதுவைக்கு திரும்பினர். இந்த நிலையில், புதுவை சட்டப் பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து 2-ம் தேதி பட்ஜெட் தாக்கலாகிறது.

பாஜக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் பட்ஜெட் கூட்டத் தொடரில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. அப்படி ஏதும் நடந்தால், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தலாம். இதனால் எம்எல்ஏ-க்களை சமரசம் செய்ய இறுதிக்கட்ட முயற்சியை பாஜக தலைமை எடுத்துள்ளது. இதற்காக நாளை சனிக்கிழமை பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா புதுவை வருகிறார். அவர் பாஜக எம்எல்ஏ-க்களை சந்தித்து மேலிடத்தின் அறிவுரைகளை தெரிவிக்கவுள்ளதாக புதுச்சேரி பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE