ஃபேஸ்புக்கில் இஸ்லாம் மத தூதர்கள் குறித்து அவதூறு: ஜாமீன் விசாரணையை ஒத்திவைத்தது ஐகோர்ட்

By கி.மகாராஜன் 


மதுரை: இஸ்லாம் மத தூதர்களை தவறாக சித்தரித்து ஃபேஸ்புக் தளத்தில் கருத்து பதிவிட்டவருக்கு ஜாமீன் வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையைச் சேர்ந்த குருஜி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், “என் மீது இஸ்லாமிய மத தூதர்களை தவறாக சித்தரித்து, மதக்கலவரத்தை தூண்டும் விதமாக முகநூலில் பதிவுகளை வெளியிட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிறையில் இருந்து வருகிறேன். நான் அதுபோன்ற பதிவுகள் எதையும் சமூக வலைதளத்தில் பதிவிடவில்லை. எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கோரி இருந்தார்.

இந்த மனு நீதிபதி நக்கீரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், “மனுதாரர் மத மோதல்களை உருவாக்கும் விதத்தில் சமூக வலைதளத்தில் மிகவும் மோசமான விமர்சனங்களை பதிவிட்டுள்ளார். விசாரணை நடைபெற்று வருவதால் இவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” என வாதிடப்பட்டது.

அகமது ஃபயாஸ் என்பவர் தரப்பில், மனுதாரரின் ஃபேஸ்புக் பதிவுகள் தாக்கல் செய்யப்பட்டு, அவருக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபனை தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி கோரப்பட்டது. இதையேற்று விசாரணையை ஜூலை 29-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE