காலநிலை மாற்ற பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் கட்டுமானங்கள்: தமிழக சுற்றுச்சூழல் துறை செயலர் யோசனை

By ச.கார்த்திகேயன்

சென்னை: பருவநிலை மாற்ற பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் குடியிருப்புகளை கட்ட வேண்டும் என்று சுற்றுச்சூழல் துறை செயலர் செந்தில்குமார் கட்டுமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் மின்சாரத்தை சேமிக்கும் வகையிலான குடியிருப்புகளை கட்டுவது தொடர்பான, கட்டுமான நிறுவனங்களுக்கான பயிலரங்கம் சென்னையில் இன்று (ஜூலை 26) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் பி.செந்தில் குமார் பங்கேற்று பேசியதாவது: இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் தான் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள தனி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் கீழ் பருவநிலை மாற்ற இயக்கம் ஈரநில பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் குடியிருப்புகளை கட்டுவது இன்றைய காலகட்டத்தில் அவசியமான ஒன்றாக உள்ளது. அதனால் கட்டுமான நிறுவனங்கள் புதிய கட்டிடங்களை கட்டும் போதும் ஏற்கெனவே கட்டப்பட்ட கட்டிடங்களை புனரமைக்கும் போதும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும் வகையிலான கட்டுமானங்களை கட்ட வேண்டும். இது குறித்து கட்டுமான நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இக்கூட்டங்கள் மாவட்ட அளவிலும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் கட்டப்படும் கட்டிடங்களில் மின் தேவையை குறைக்கும் வகையிலும் அம்சங்கள் இடம் பெறுவது அவசியம்” என செந்தில்குமார் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா பேசுகையில், “உலக அளவில் பெட்ரோல் எரிபொருள் பயன்பாடும் அதனால் வெளியேற்றப்படும் கார்பன் மாசும் நகர்ப் புறங்களில் அதிகமாக உள்ளது. இதில் சென்னை விதிவிலக்கல்ல. சென்னை போன்ற நகரங்களில் கான்கிரீட் கட்டுமானத்திலிருந்து காரியமில வாயு வெளியேற்றம் அதிகமாக உள்ளது.

இதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய குடியிருப்புகளை கட்டுமான நிறுவனங்கள் கட்ட வேண்டும். சிஎம்டிஏ நிர்வாகமும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களை காக்க மூன்றாவது பெரும் திட்டத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளது” என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை இயக்குநர் ஏ.ஆர்.ராகுல்நாத், சென்னை மாநகராட்சி துணை ஆணையர் கட்ட ரவி தேஜா, இந்திய மனித குடியமர்வு நிறுவன இயக்குநர் அரோமர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE