சென்னை - கதிர்வேடு பிரிட்டானியா நகரில் குடிநீர், பாதாள சாக்கடை இல்லாமல் அவதி

By செய்திப்பிரிவு

சென்னை கதிர்வேடு பிரிட்டானியா நகரில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாவதாக உங்கள் குரலில் வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை கதிர்வேடு, பிரிட்டானியா நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்த வாசகர் ஒருவர் 'இந்து தமிழ் திசை' நாளிதழின் ‘உங்கள் குரல்' சேவை தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவித்ததாவது: சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், 31-வது வார்டான கதிர்வேடு, 32-வது வார்டான சூரப்பட்டு ஆகியவற்றில் பிரட்டானியா நகர் அமைந்துள்ளது.

இது 30 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட மனைப்பிரிவாகும். கடந்த 2011-ம் ஆண்டு மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. வளர்ச்சி அடைந்து வரும் பகுதியான இங்கு சுமார் 300 குடியிருப்புகள் உள்ளன. அவற்றில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் குழாய் இணைப்பை முழுமையாக வழங்கவில்லை.

அதேபோன்று பாதாள சாக்கடை திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. இதனால் சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால், கழிவுநீர் தொட்டியை மாதந்தோறும் அகற்ற வேண்டியுள்ளது. குடிநீருக்கும், கழிவுநீர் அகற்றத்துக்கும் தனியார் லாரிகளையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக குடிநீர், கழிவுநீர் சேவைகளுக்காகவே, மாத வருவாயில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைக்க வேண்டியுள்ளது.

சென்னை குடிநீர் வாரியம் எங்களிடம் 6 மாதங்களுக்கு ஒருமுறை வரியை வசூலிக்கிறது. ஆனால் சேவை வழங்க மறுக்கிறது. இது தொடர்பாக, சென்னை குடிநீர் வாரியத்தின் வார்டு பொறியாளர், மண்டல பொறியாளர், வாரிய தலைமையகத்தில் உள்ள மேலாண் இயக்குநர் ஆகியோரிடம் புகார் மனு அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறும்போது, "பிரிட்டானியா நகரில் 1 முதல் 10 தெருக்கள் உள்ளன. இதில் 1 முதல் 4 தெருக்கள் வரை குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. வீட்டு கழிவுநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுவிட்டது. தற்போது, சோதனை ஓட்டம் முடிவடைந்து வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்ட தெருக்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, திட்டமிடல் மற்றும் வடிவமைத்தல் துறைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE