ம.பி.யில் முதலீடு செய்வதன் மூலம் வணிகத்தில் முன்னேற்றம் அடையலாம்: ம.பி. முதல்வர் மோகன் யாதவ் அழைப்பு @ கோவை

By செய்திப்பிரிவு

கோவை: மத்தியப் பிரதேசத்தில் முதலீடு செய்வதன் மூலம் வணிகத்தில் முன்னேறலாம் என, கோவை தொழில்துறை யினருக்கு அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் அழைப்பு விடுத்தார்.

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவுடன் தொழில்துறையினர் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவையில் நேற்று நடந்தது. இதில் மோகன் யாதவ் பேசியதாவது:

ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரிபாக உற்பத்தித் துறையில் நாட்டின் முக்கிய உற்பத்தி மையமாக கோவையை இங்குள்ளதொழில்முனைவோர் மாற்றியுள் ளனர். பொறியியல் துறையிலும், பம்ப் உற்பத்தியிலும், ஸ்மார்ட் இயந்திர உபகரணங்களின் உற்பத்தியிலும் ஈடு இணையற்றவர் களாக உள்ளதை தெரிந்து கொண்டேன். மத்தியப் பிரதேசத்திலும் இந்த துறைகள் நல்ல வளர்ச்சி பெற்று வருகின்றன. அங்கு முதலீடுசெய்வதன் மூலம் வணிகத்தை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்லலாம்.

மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2003-ம் ஆண்டு, 11 பெரிய ஆடைஉற்பத்தி யூனிட்கள் இருந்த நிலையில், தற்போது 53-ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆயிரம் சிறிய மற்றும் பெரிய யூனிட்டுகள் இயங்குகின்றன. 60-க்கும் மேற்பட்ட பெரியஅளவிலான நவீன ஜவுளி ஆலைகள், 40,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள், 12,000-க்கும் மேற்பட்ட கைத்தறிகள் இயங்கி வருகின்றன.

நவீன ஜவுளி ஆலைகளை ஈர்க்க,மாநிலத்தில் ‘சிறப்பு ஆயத்த ஆடை கொள்கை’ அமல்படுத்தப்பட்டது. இந்தக் கொள்கையின் கீழ், ஆடை நிறுவனங்களால் செய்யப்படும் நிலையான மூலதன முதலீட்டில் 200 சதவீதம் வரை நிதி உதவி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் தொழிலாளர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் இருப்பதால், இரவு ஷிப்டுகளில் வேலைசெய்வதில் அவர்கள் எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்வதில்லை.

கோவை நிகழ்வில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம். இதன் மூலம் உங்களது நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி பருத்தி பயிரிடும்நிலப்பரப்பு மற்றும் உற்பத்தித்திறனை மேலும் அதிகரிக்கச் செய்வோம். மேலும், திருப்பூர் ஏற்றுமதிசங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். இந்த ஒப்பந்தங்களின் மூலம், திறன் மேம்பாடு மற்றும் கிளஸ்டர் மேம்பாட்டுக்கு உதவும் திறன்மிக்க மனிதவளத்தை மாநிலம் முழுவதும் தயார்படுத்த முடியும்.

2025-ம் ஆண்டு பிப். 7, 8-ம் தேதி களில் போபாலில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நடத்தப்படுகிறது. இதில் கோவை உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர் திரளாக பங்கேற்க வேண்டும். மத்தியப் பிரதேசத்தில் கிடைக்கும் அபரிமிதமான வாய்ப்புகளைப் பயன்படுத் திக் கொள்வதன் மூலம், ‘வளர்ந்த இந்தியாவுடன் வளர்ந்த மத்தியப் பிரதேசம்’ என்ற எங்களின் பார்வையை நனவாக்குவதில் முக்கியப்பங்காற்றுவீர்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறும்போது, “கோவையில் மத்தியப் பிரதேச தொழில் மேம்பாட்டு மையத்தின் அலுவலகம் திறக்கப்படும். தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களை நாங்கள் எடுத்துச் செல்லவில்லை. எங்கள் மாநிலத்திலும் முதலீடு செய்ய வரும்படி தான் அழைக்கிறோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE