“மூத்த அமைச்சர்களுக்கே துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும்” - பிரேமலதா விஜயகாந்த்

By செய்திப்பிரிவு

பூந்தமல்லி: “திமுகவில் உள்ள மூத்த அமைச்சர்களுக்கே துணை முதல்வர் பதவியை முதல்வர் ஸ்டாலின் வழங்க வேண்டும்,” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

மின கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. பூந்தமல்லி பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன முழுக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியது: “மின் கட்டண உயர்வு, ரேஷன் பொருட்களில் அத்தியாவசமான பாமாயில், பருப்பு வகைகள் மக்களுக்கு இன்று வரை கிடைக்காதது, அதேபோல், காவிரியில் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை, திமுக அரசு கூட்டணியில் இருந்தாலும், காங்கிரஸ் கட்சியிடம் இருந்து நமக்கு பெற்றுத்தரவில்லை என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திதான், தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் இன்று நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மிகப் பெரிய ஒரு கேள்வியாக உள்ளது. மக்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. இது கண்டிக்கத்தக்க ஒரு விஷயம். இன்று எல்லா வகையிலும், தமிழக மக்களும், தமிழகமும் பாதிக்கப்பட்டுள்ளது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வகையில், இங்கு எதுவுமே நடக்காதது போல, நல்லாட்சி நடைபெறுவது போன்று ஒரு தோற்றத்தை உருவாக்கி, பொய்யாக பேசிக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார். மக்கள் அனைவரும் இதை பார்த்துக்கொண்டுதான் உள்ளனர். இது ஒரு தவறான விஷயம் .

அதுமட்டுமல்ல, ஒரு முதல்வர் எப்படி இருக்க வேண்டும். வேட்டியும் சட்டையும் அணிய வேண்டும். அதுதான் அடையாளம். ஆனால், முதல்வர் பேன்ட் சட்டை அணிந்து வருகிறார். காரணம், அவரால் நடக்க முடியவில்லை. கைகளில் உதறல் இருக்கிறது. முதல்வர் மிகப் பெரிய உடல்நிலை பாதிப்பில் இருக்கிறார். அது வெளியே தெரியக் கூடாது என்பதற்காகத்தான் பேன்ட் சட்டை அணிந்துகொண்டும், கை உதறுவதை மறைப்பதற்காக, கைகளை பேன்ட் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொள்கிறார்.

முதல்வர் நல்ல உடல்நிலை ஆரோக்கியத்துடன் இருந்தால்தான், மக்களுக்கு நன்மை செய்ய முடியும். எனவே, திமுகவில் உள்ள மூத்த அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் பதவியை வழங்க வேண்டும் தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறோம். அதேபோல், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் யார் உண்மையான குற்றவாளியோ, அதை வெளியே கொண்டு வந்து நியாயத்தை வழங்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE