தினசரி மின் தடை, குறைந்த மின் அழுத்தம்: சிரமத்தில் சென்னை - மேடவாக்கம் மக்கள்

By கி.கணேஷ்

தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதாக பேசப்பட்டு வரும் நிலையில், சென்னை மாநகராட்சியுடன் இணைக்க மக்களால் வலியுறுத்தப்பட்டு வரும் பகுதி மேடவாக்கம். தற்போது பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள், வர்த்தக பகுதிகள் நிறைந்ததாக மேடவாக்கம் உள்ளது. இதில், பாபுநகர், விமலா நகர், ஐஸ்வர்யா கார்டன் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. ஆனால், கடந்த சில மாதங்களாக குறிப்பாக வெயில் காலம் ஆரம்பித்தது முதல் இப்பகுதியில் அவ்வப்போது மின் தடை, குறைந்த மின் அழுத்த பிரச்சினை தொடர்ந்து இருந்து வருகிறது.

குறிப்பாக, இரவு நேரத்தில், குறைந்தமின் அழுத்தம் காரணமாக, குளிர்சாதன இயந்திரங்களை இயங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. மின்விசிறியின் இயக்கமும் குறைவதால், இரவு தூக்கத்தை பலரும் தொலைத்து வருகின்றனர். இதுதவிர, சமீபகாலமாக பகல் மற்றும் இரவில் சராசரியாக ஓரிரு முறை மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் இங்குள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து, பாபுநகர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் கூறும்போது, ‘‘வெயில் அதிகரித்த நேரத்தில் இரவு 10 மணிக்கு மேல், பெரும்பாலான நாட்களில் குறைந்த மின் அழுத்தம் உள்ளது. இதனால், ஏசி இயங்குவதில் சிக்கல் ஏற்படும். மின்னழுத்தம் குறையும் போது மின்சாரம் தடைபடுகிறது. மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டாலும், சிறிது நேரம் சீராக வரும், அதன்பின் மீண்டும் குறைந்துவிடும். வெயில் காலத்தில் அதிகளவில் ஏசி இயங்குவது என்பது சகஜம்தான். இதற்கான முன்னேற்பாடுகளை மின்வாரியத்தினர் செய்ய வேண்டும்.

அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், குறைந்த மின் அழுத்த பிரச்சினை இல்லை. ஆனால், பகல் மற்றும் இரவில் மின் தடை ஏற்படுகிறது. அதேபோல், மின்தூக்கி இல்லாத, 10 வீடுகளுக்கு குறைவான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பொது பயன்பாட்டுக்கான மின் கட்டணம் குறைக்கப்பட்டது. முதலில் உயர்த்தப்பட்டபோது அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் மின் கட்டணத்தை உயர்த்திய மின்வாரியத்தினர், குறைக்கும்போது, பொதுமக்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்கின்றனர். அவ்வாறு விண்ணப்பித்தாலும் உடனடியாக குறைக்கப்படுவதில்லை. மின்வாரிய அலுவலர்களே ஆய்வு செய்து, இதற்கான கோரிக்கைகளை பெற்று குறைத்து தரவேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மழை, காற்று அதிகம் இருக்கும் போது மின்சாரத்தை நிறுத்த வேண்டியுள்ளது. தற்போது மேடவாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், அடிக்கடி கேபிள்கள் வெட்டப்பட்டு பழுது ஏற்படுகிறது. இது அப்பகுதியில் மின் தடை ஏற்பட காரணமாகிறது. நாங்கள் முன்பே கேபிள் வரும் பகுதி குறித்த தகவல்களை தெரிவித்தாலும், பள்ளம் தோண்டும் போது வெட்டி விடுகின்றனர்.

குறிப்பாக, மெட்ரோ ரயில் ஒப்பந்த பணியாளர்கள் உரிய பயிற்சி பெற்றவர்களாக இருப்பதில்லை என்பதால், எந்த இடத்தில் எந்த முறையில் பணியாற்ற வேண்டும் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை’’ என்றார். மேடவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போதும் சாலையை மூடி தூண் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இரு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே இது போன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE