165-வது வருமான வரி தின விழா | நாட்டின் கட்டமைப்பில் வருமான வரி துறைக்கு முக்கிய பங்கு: ஆளுநர் புகழாரம்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘‘வருமான வரித் துறை வரி வசூல் செய்வது மட்டுமின்றி நாட்டின் கட்டமைப்புக்கும் முக்கியப் பங்காற்றி வருகிறது’’ என ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறை அலுவலகம் சார்பில், 165-வது வருமான வரி தின விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.விழாவில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையர் சுனில் மாத்தூர் வரவேற்புரை ஆற்றினார்.

அப்போது, அவர் பேசுகையில், ‘`அரசு நிர்வாகத்துக்கு வரி வருவாய் என்பது முதுகெலும்பாக உள்ளது. அரசின் மொத்த வருவாயில் 37சதவீதம் வருமான வரித் துறையின் பங்களிப்பாகும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறையின் 2024-25-ம் நிதியாண்டுக்கான வரி வருவாய் ரூ.1.38 லட்சம் கோடி என இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது’’ என்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியதாவது:

நாட்டின் வளர்ச்சிக்கு வரி வருவாய் என்பது முக்கியமானதாகும். கடந்த 10 ஆண்டுகளில் வரி வருவாய் 300 சதவீதம் அதிகரித்துள்ளது. வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கை 200 சதவீதமாக அதிகரித்துள்ளது.

1947-ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தபோது உலக அளவில் இந்தியாவின் பொருளாதாரம் 6-வது இடத்தில் இருந்தது. பின்னர், 2014-ம் ஆண்டு 11-வது இடத்துக்கு சென்றது. தற்போது 6-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சியிலும், அதன் பிறகு நாடு சுதந்திரம் அடைந்த போதும் வரி செலுத்துபவர்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்பட்டனர். தற்போதுஅந்த நிலை மாறி உள்ளது. வருமான வரித் துறை வரி வசூல் செய்வது மட்டுமின்றி நாட்டின் கட்டமைப்புக்கும் முக்கியப் பங்காற்றி வருகிறது.

இவ்வாறு ஆளுநர் ரவி கூறினார்.

முன்னதாக, விழாவில் அதிக வரி செலுத்தியவர்களை ஆளுநர் கவுரவித்தார். அத்துடன், சிறப்பாக பணியாற்றிய வருமான வரித் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் விருதுகளையும் ஆளுநர் வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE