நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.50 லட்சம் நலத்திட்ட உதவி: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியம் சார்பில் 941 கலைஞர்களுக்கு ரூ.50 லட்சத்துக்கான நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தின் நலத் திட்டங்களுக்கான நிதி, பணியாளர் ஊதியம் உள்ளிட்ட நிர்வாக செலவுகளுக்கான தொடர் ஒதுக்கீட்டு நிதி ரூ.35 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்தப்படும் என்று கடந்த 2023-24-ம் ஆண்டுக்கான கலை, பண்பாட்டு துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

நலவாரியத்தின் அனைத்து நலத் திட்டங்களையும் தொய்வின்றி செயல்படுத்தி, நாட்டுப்புற கலைஞர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, நல வாரியத்தில் நல உதவிகள் கோரி விண்ணப்பித்தவர்களில், தகுதியான 941 நாட்டுப்புற கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் அடையாளமாக, 10 நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் அவர்களது மரபுரிமையினருக்கு கல்வி உதவித் தொகை, திருமண நிதியுதவி, மூக்கு கண்ணாடி நிதியுதவி, இறுதிச்சடங்கு நிதியுதவிக்கான ரூ.1.21 லட்சம் மதிப்பிலான காசோலைகள் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாட்டு துறை செயலர் சந்திரமோகன், கலை, பண்பாட்டு துறை இயக்குநர் எஸ்.ஆர்.காந்தி, தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய தலைவர் வாகை சந்திரசேகர், செயலாளர் ஜி.விமலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE