பெரம்பூரில் புதிய ரயில் முனையம்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து பெரம்பூரில் புதிய ரயில் முனையம் அமைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.

தமிழக ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம், கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி, கும்பகோணம், ராமேசுவரம், காட்பாடி ஆகிய ரயில்நிலையங்கள் முற்றிலுமாக சீரமைக்கப்படுகின்றன. எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்பு பணி இன்னும் 2 ஆண்டுகளில் முடிவடையும்.

மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லை: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.6362 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே திட்டங்களுக்கு நிதி பெறுவதில் ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால், மாநில அரசிடமிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைப்பதில்லை.

புதிய ரயில்வே மேம்பாலங்கள், ரயில்வே சுரங்க பாதைகள் அமைக்க முன்னுரிமை அளித்து வருகிறோம். 40 ரயில்வே மேம்பாலங்களை அமைப்பதில் ரயில்வே துறையின் பணி முடிந்துவிட்டது. ஆனால், தமிழக அரசின் பணிதான் நிலுவையில் உள்ளது.

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையேயான 4-வது ரயில் பாதை அமைக்கும் பணி வரும் அக்டோபர் மாதம் முடிவடையும். திண்டிவனம் -நகரி, ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி, ராமேசுவரம் - தனுஷ்கோடி உள்ளிட்ட பல்வேறு புதிய ரயில் பாதை திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ராமேசுவரம் - தனுஷ்கோடி திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதில் பெரியஅளவில் பிரச்சினைகள் உள்ளன. தமிழக அரசிடமிருந்து உரிய ஒத்துழைப்பு கிடைக்காததால்தான் நிறைய ரயில்வே திட்டங்கள் நிலுவையில் உள்ளன.

சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் முனையங்களை தொடர்ந்து 4-வது ரயில் முனையம் பெரம்பூரில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான ஆய்வு பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

இப்பணி ஒரு மாதத்தில் முடியும். அதைத்தொடர்ந்து விரிவான திட்டஅறிக்கை தயாரிக்கப்பட்டு நிதி கோரப்படும். நிதி ஒதுக்கப்பட்டால் அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் பணி முடிந்துவிடும். வில்லிவாக்கத்தில் புதிய ரயில் முனையம் அமைக்க தேவையான நிலம் கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கிளாம்பாக்கம் ரயில் நிலையம்: சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் பி.விஸ்வநாத் கூறும்போது, கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரயில் நிலையத்துக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்த வேண்டியுள்ளது. அந்த ரயில் நிலையத்தில் 2 புதிய லூப்லைன்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ரயில் நிலையம் அமைக்கும் பணி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடிக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்