காங்கயம் அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவை விரிவுபடுத்தப்படுமா?

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் முக்கிய போக்குவரத்து மையமாக காங்கயம் உள்ளது. காங்கயத்தை சுற்றி விவசாயம், அரிசி ஆலைகள் மற்றும் எண்ணெய் ஆலைகள் ஏராளமானவை இயங்கி வருகின்றன. இன்றைய சூழலில் காங்கயத்திலுள்ள அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் நாள்தோறும் சுமார் 450 பேர், உள்நோயாளிகள் 50 பேர் என 500 பேர் பயன் பெற்று வருகின்றனர்.

இங்கு 9 மருத்துவர்கள், 7 செவிலியர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்கள் 8 பேர், தூய்மை பணியாளர்கள் 2 பேர், ஒப்பந்த பணியாளர்கள் 2 பேர் என சுமார் 28 பேர் பணிபுரிந்து வருகின்றனர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் சொந்த தொகுதியான காங்கயத்தில் அரசு மருத்துவமனை தற்போது மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, கட்டிட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் அடிக்கல் நாட்டி கட்டிட பணிகளை தொடங்கிவைத்தனர். இன்றைக்கு அந்த பணிகள் நிறைவடைந்துள்ளன. கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, மின் இணைப்பு மற்றும் குழாய் இணைப்புகள் உள்ளிட்டவை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காங்கயத்தை சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி, திருப்பூர் நாச்சிபாளையம், நல்லூர், வெள்ளகோவில் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் சிகிச்சைக்காக காங்கயம் வருகிறார்கள். இதற்கு, பேருந்து நிலையத்துக்கு எதிரிலேயே அரசு மருத்துவமனை இருப்பதுதான் முக்கிய காரணம். திருப்பூர் நாச்சிபாளையத்தில் இருந்து ஒருவர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்வதற்கு இரண்டு பேருந்துகள் மாற வேண்டிய சிரமம் உள்ளது. ஆனால், காங்கயம் என்றால் ஒரே பேருந்தில் சென்று சிகிச்சை பெறும் வசதி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இன்றைக்கு காங்கயத்தில் சிகிச்சை பெறுவதாக சொல்கிறார்கள் அங்கு வந்த நோயாளிகள்.

தமிழ்நாடு பொதுப்பணித் துறை சார்பில் ரூ.12 கோடி மதிப்பில் 3 தளங்களுடன் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது. காது, மூக்கு, தொண்டை, கண், எலும்பு மூட்டு, சிடி ஸ்கேன், லிஃப்ட் என பல்வேறு வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதேபோல் மகப்பேறுக்கு முன், மகப்பேறுக்கு பின்புள்ள சிகிச்சை, அறுவை சிகிச்சை அரங்குகள், குழந்தைகள் நல மருத்துவம், மகப்பேறு அறுவை சிகிச்சை அரங்கு உள்ளிட்ட வசதிகளுடன் மிக பிரம்மாண்டமாக மருத்துவமனை விரிவடைகிறது. புதிய கட்டிடத்தில் அனைத்து சிகிச்சைகளுக்கும் சேர்த்தும் 60-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

இதுதொடர்பாக காங்கயத்தை சேர்ந்தவர்கள் கூறும்போது, ‘‘காங்கயம் பெரும்பாலும் விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதி. விபத்தில் சிக்குபவர்களுக்கு கை, கால் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆர்த்தோ சிகிச்சை அவசியம். அதற்கான சிடி ஸ்கேன் உள்ளிட்டவை வருவதை வரவேற்கிறோம். அதேபோல் ஆர்த்தோ சிகிச்சை முழு நிறைவடையும் வகையில், தலை காயம் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலுதவி அளித்து, அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கும் வகையில் நரம்பியல் மருத்துவர்களையும் நியமிக்க வேண்டும். பாம்பு தீண்டியதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் இந்த பகுதியில் அதிகம் என்பதால், அதற்கு தகுந்தாற்போல் விஷ முறிவு சிறப்பு வார்டுகளை அமைக்க வேண்டும்.

கூடுதல் கட்டிடம் மற்றும் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போதுள்ள பணியாளர்களை போல், இன்னும் 4 மடங்கு பணியாளர்கள் புதிதாக நியமிக்கும்போது, அனைவருக்குமான மாவட்ட அரசு மருத்துவமனையின் நோக்கம் முழுமையாக நிறைவேறும். இவற்றையும் அரசு கவனத்தில் கொண்டு, புதிய பணியாளர்களை நியமித்து, விரிவுபடுத்தப்பட்ட மருத்துவ சேவையை அனைவருக்கும் வழங்க வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE