சென்னை: “காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் வருகிற அக்டோபர் மாதத்துக்குள் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக செயல்படுத்தப்படும். இதுபற்றி 10 ஆண்டு காலம் கவலைப்படாமல் இருந்துவிட்டு தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அறிக்கை விடுவது எந்த வகையில் ஏற்புடையது.” என்று வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை உயர் நீதிமன்ற ஆணைப்படி டாஸ்மாக் நிறுவனத்தால் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15.05.2022 முதல் அமல்படுத்தப்பட்டது. மற்ற மலை சார்ந்த பகுதிகளில் 15.06.2022 முதல் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து இதர மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்து இதுவரை மொத்தமாக 9 மாவட்டங்களில் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டத்தினை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தும் பொருட்டு மண்டலங்கள் வாரியாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் காலி பாட்டில்கள் மூன்றாம் நபரிடம் செல்லாமல் இருப்பதற்காகவும், காலி பாட்டில்கள் உடைக்கப்படாமல் மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கே சென்றடைய வேண்டுமென்ற நோக்கத்துடனும் சென்னை உயர்நீதிமன்றம் காலி பாட்டில்களை மதுபான உற்பத்தி நிறுவனங்களே திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டி அறிவுறுத்தியது. அதனடிப்படையில் ஏற்கெனவே கோரப்பட்டிருந்த ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டது.
மேலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் நடவடிக்கையாக மதுபான உற்பத்தி நிறுவனங்களை அழைத்து காலி பாட்டில்களை அவர்களே சேகரம் செய்ய வேண்டுமென்ற பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மதுபான உற்பத்தியாளர்களும் காலி பாட்டில்களை திரும்ப பெறுவது குறித்து இசைவு தெரிவிக்க சிறிது கால அவகாசம் கேட்டுள்ளனர். சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் திமுக ஆட்சியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
» தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு… எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?
» AI மூலம் ஊழியர்களை கண்காணிக்கும் சூப்பர் மார்க்கெட் நிறுவனம்!- ஜப்பானில் சுவாரஸ்யம்
இத்திட்டத்தினை சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலுடன் வருகிற அக்டோபர் மாதத்துக்குள் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. வயல்களிலும் சாலைகளிலும் பூங்காக்களிலும் காலி மதுபாட்டில்கள் வீசப்படுவதை தடுப்பதற்காகத்தான் திமுக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஏன் எடப்பாடி பழனிசாமி இதை சிந்திக்கவில்லை?.
இப்பொழுது குற்றச்சாட்டுகள் சொல்லக்கூடியவர்கள் அந்த 10 ஆண்டு காலத்தில் இதை நடைமுறைபடுத்தியிருக்கலாமே?. காலி பாட்டில்கள் வயல்களிலும் பொது இடங்களிலும் வீசப்பட்டதால் அந்த நேரத்தில் விவசாயிகளும் பொதுமக்களும் எவ்வளவு கடுமையாக பாதிக்கப்பட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. 10 ஆண்டு காலமாக அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசுக்கு வரவேண்டிய வருவாய் என்ன ஆனது? என்று கேட்க வேண்டியுள்ளது.
காலி பாட்டில்களை திரும்ப பெறுவதற்கான புதிய முயற்சிக்கான நடவடிக்கையை எடுக்கிறபொழுது உயர் நீதிமன்றம் சில நல்ல அறிவுறுத்தல்களை தெரிவித்ததன் அடிப்படையில் அதை அமலாக்கவே ஏற்கெனவே விடப்பட்ட டெண்டரை டாஸ்மாக் நிர்வாகம் ரத்து செய்துள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.மேலும், கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டு கூறியுள்ளார். உங்களின் கடந்த கால ஆட்சியில் இருந்து தொடர்ச்சியாக இருந்துவந்த அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு பணியாளர் அந்த தவறை செய்வதற்கு என்ன காரணம் என்பதை ஆய்வு செய்தபோது டேமேஜ் ஆகிற பாட்டில்களுக்கு போதிய நஷ்ட ஈடு கிடைப்பதில்லை; கூடுதல் கடை வாடகை மற்றும் பராமரிப்புக்கான செலவு செய்ய வேண்டியுள்ளது; மின்சார கட்டணம் கூடுதலாக கட்ட வேண்டியுள்ளது; இந்த செலவுகளை பணியாளர்களே ஏற்றுக்கொள்ளும் நிலை இருந்தது. தற்போது அவைகளை ஆய்வு செய்து மின்சாரத்துக்கு தனி மீட்டர் பொருத்தி, உரிய கட்டணத்தை செலுத்திட டாஸ்மாக் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாடகை முறையாக நிர்ணயிக்கப்பட்டு, துறை அந்த வாடகையை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. டேமேஜ் ஆகும் பாட்டில்களை சரியாக கணக்கிட்டு அச்செலவையும் நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் வங்கிகள் மூலமாக மின்னணு கருவிகள் (Point of Sale Machines) நிறுவப்பட்டு மின்னணு பரிவர்த்தனைகள் மூலமாக பணம் செலுத்தும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் Billing Machine வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு விற்பனைக்கு ஏற்றார்போல் ஒரு மதுபான கடைக்கு இரண்டு முதல் நான்கு வரை பொருத்தும் பொருட்டு 12,000 பில்லிங் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு மாத காலத்துக்குள் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளிலும் பில்லிங் இயந்திரங்கள் பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பணியாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து பாதுகாக்க வேண்டியது அரசினுடைய கடமை என்கிற வகையிலே கலந்தாய்வின் மூலம் பணிமாற்றம் செய்து கொடுத்தது; மருத்துவ செலவுக்கான ஏற்பாடு செய்தது; பணியாளர்களை நேரடியாக அழைத்து அவர்களுக்கு இருக்கிற பிரச்சினைகளை தீர்க்க முயற்சித்தது போன்ற காரணங்களால் பணியாளர்கள் நம்பிக்கையோடு பணியாற்றுகிறார்கள் என்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.
மேலும் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் கடந்த ஆண்டு 20% வழங்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கள் முன்வைக்கும் மற்ற கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து பேச்சுவார்த்தை நடத்தி அக்கோரிக்கைளுக்கு தீர்வு காணப்படும். சில இடங்களில் கூடுதலாக விற்கிறார்கள் என்ற செய்தி கிடைத்தவுடன் விசாரித்து சம்மந்தப்பட்டவர்கள் மீது பணியிடை நீக்கம் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளிலோ பார்களிலோ தவறு நடந்தால் தொடர்ச்சியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சில இடங்களில் வெளியிலே விற்பனை செய்யக்கூடியவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது உட்பட கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937-ல் திருத்தம் செய்யப்பட்டு அதில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அபராதத் தொகையை அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை உயர்த்தியும், தண்டனைகளை கடுமையாக்கி அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போது மதுக்கூடங்களுக்கு ஆன்லைன் மூலமாக டெண்டர் விடப்பட்டு வெளிப்படைத் தன்மையுடன் முடிவெடுக்கப்படுகிறது. உங்கள் ஆட்சிக் காலத்தில் ஆன்லைன் டெண்டர் முறை இருந்ததா? காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவதை பற்றி 10 ஆண்டு காலம் கவலைப்படாமல் இருந்துவிட்டு தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி இப்படிப்பட்ட ஒரு அறிக்கை விடுவது எந்த வகையில் ஏற்புடையது.” என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago