சென்னை: வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்த பரிந்துரையை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து விரைவாக பெற்று, சட்டமியற்றி வன்னியர்களுக்கான சமூகநீதியை வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டிலிருந்து வன்னியர்களுக்கு 10.50% உள் இடஒதுக்கீடு வழங்குவது பற்றி பரிந்துரைக்க பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்து விட்ட நிலையில், இதுவரை காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை. இன்னொருபுறம், வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க மேலும் ஓராண்டு காலம் தேவை என்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கோரியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
வன்னியர் இடஒதுக்கீட்டு கோரிக்கையின் தீவிரம் புரியாமல், கால்பந்து போன்று அக்கோரிக்கையை அரசும், ஆணையமும் உதைத்து ஆடுவது கண்டிக்கத்தக்கது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டிலிருந்து வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது மிகவும் எளிதான நடைமுறை. அதை சிக்கலாக்கிக் கொள்வதற்கு எந்தத் தேவையும் இல்லை. ஆனாலும், தங்கள் ஆட்சியில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிவிடக் கூடாது என்பதற்காகவே இதை தி.மு.க அரசு சிக்கலாக்குகிறதோ? என்று எண்ணத் தோன்றுகிறது.
முந்தைய அதிமுக ஆட்சியில் போராடிப் பெற்ற வன்னியர் இட ஒதுக்கீடு சென்னை உயர்நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை என்று மிகத் தெளிவான தீர்ப்பை அளித்துள்ளது. அதே நேரத்தில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி தான் வன்னியர் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை.
» மின் கட்டண உயர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்குப்பதிவு - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
» பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் காலி ஆசிரியர் பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும்: ராமதாஸ்
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் 68-ஆம் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள pertinent, contemporaneous data என்ற பதத்திற்கு ‘‘நிகழ்காலத்திற்கான, தகுந்த புள்ளிவிவரங்கள்’’ என்பது தான் பொருளே தவிர, சாதிவாரி புள்ளி விவரங்கள் என்று பொருள் அல்ல. இந்தத் தீர்ப்பின் அடிப்படையிலான புள்ளிவிவரங்களைத் திரட்டி வன்னியர் இட ஒதுக்கீடு வழங்க ஒரு மாதமே போதுமானது. ஆனால், இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க ஒன்றரை ஆண்டுகள் வழங்கப்பட்டும், அதை நோக்கிய பயணத்தில் எந்த முன்னேற்றமும் எட்டப்படாத நிலையில், மேலும் ஓராண்டு காலக்கெடு வழக்கப்பட வேண்டும் என ஆணையம் கோருவது எவ்வகையிலும் நியாயமல்ல.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு 08.04.2022 ஆம் நாள் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியின் குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசியது. அப்போது அடுத்த 3 மாதங்களில் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை நடைபெறவிருப்பதை சுட்டிக்காட்டிய போது, அதற்கு முன்பாகவே வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்படும் என்றும், அதற்காக தேவைப்பட்டால் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத் தொடர் கூட்டப்படும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.
ஆனால், அதன்பின் இரு ஆண்டுகள் ஆகியும் வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்படாதது ஏன்? அப்போது வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு சாதிவாரி கணக்கெடுப்புத் தேவை என்பது குறித்து எதுவும் கூறாத முதல்வர் ஸ்டாலின், இப்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கூறுவது ஏன்? இடைப்பட்ட காலத்தில் நடந்தது என்ன? முதலமைச்சரின் திடீர் நிலை மாற்றத்தின் பின்னணியில் உள்ள மர்மம் என்ன?
வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரை அளிக்கும்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தைக் கேட்டுக் கொள்ளும் அரசாணை 12.01.2023 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரை அளிப்பதற்காக ஆணையத்திற்கு 3 மாதம் கெடு வழங்கப்பட்டது; அதன்பின் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை முதல் முறையாகவும், 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இரண்டாம் முறையாகவும் தலா 6 மாதங்கள் காலக்கெடு நீடிக்கப்பட்டது.
மூன்றாவது முறையாக கடந்த 11.07.2024 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. 3 மாத இடைவெளியில் அறிக்கை தாக்கல் செய்யும்படி ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடு 15 மாதங்கள் நீட்டிக்கப்பட்ட நிலையில், மேலும் ஓராண்டிற்கு காலக்கெடுவை நீட்டிக்கும்படி ஆணையம் கோர வேண்டிய தேவை என்ன?
1. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக, கல்வி, வேலைவாய்ப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக முதன் முதலில் அமைக்கப்பட்ட சட்டநாதன் ஆணையம் ஒரே ஆண்டில் (18.11.1969 --&26.11.1970) அதன் பணிகளை முடித்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை 33% ஆக உயர்த்த வேண்டும், அதை இரண்டாக பிரித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
2. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 50% ஆக உயர்த்தப்பட்டதை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட அம்பாசங்கர் ஆணையம், பிற்படுத்தப்பட்ட மக்களை வீடு, வீடாக சென்று மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது உள்ளிட்ட கடினமான அனைத்துப் பணிகளையும் 26 மாதங்களில் (13.12.1982 --&28.2.1985) முடித்து அதன் அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல், செய்தது.
3. 2008 ஆம் ஆண்டில் இஸ்லாமியர் உள் இட ஒதுக்கீடு குறித்த பரிந்துரை அறிக்கையைக் நீதியரசர் ஜனார்த்தனம் ஆணையம் 6 மாதங்களில் நிறைவு செய்து தமிழக அரசிடம் தாக்கல் செய்தது.
4. அதே ஆண்டில் அருந்ததியர் இட ஒதுக்கீடு குறித்த பரிந்துரையை நீதியரசர் ஜனார்த்தனம் ஆணையம் 8 மாதங்களில் (25.03.2008& 22.11.2008) தமிழக அரசிடம் தாக்கல் செய்தது.
ஆனால், ஒப்பீட்டளவில் மேற்கண்ட ஆணையங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை விட நீதியரசர் பாரதிதாசன் தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட பணி மிக, மிகக் குறைவானது ஆகும். அந்த மிகக்குறைவான பணிகளை முடிக்க இதுவரை வழங்கப்பட்ட 18 மாதங்கள் போதாது என மேலும் 12 மாதங்கள் காலக்கெடு கோருவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உள் இட ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்வதற்கான பணி ஒப்படைக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரையிலான 18 மாதங்களில் தமிழக அரசும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் ஆக்கப்பூர்வமாக செய்த பணிகள் என்னவென்று தெரியவில்லை. அவ்வாறு ஏதேனும் செய்திருந்தால், அவற்றை இடைக்கால அறிக்கையாக தாக்கல் செய்து விட்டு கூடுதல் காலக்கெடு கோரினால், அது அர்த்தமுள்ளதாக இருக்கும். அதை விடுத்து அரசும், ஆணையமும் காலத்தை மட்டும் கழிப்பது வன்னியர்களை ஏமாற்றும் செயலாகும்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடந்த 2022&ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்டது. அதன் பதவிக்காலமே இன்னும் 15 மாதங்கள் மட்டும் தான் உள்ளன. அதற்குள் வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க 12 மாதங்கள் கூடுதல் காலக்கெடு கோருவது தமிழ்நாடு அரசும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் இணைந்து நடத்தும் காலம் தாழ்த்தும் நாடகமாகவே தோன்றுகிறது.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவதற்காக உச்சநீதிமன்றம் வகுத்துத் தந்த பாதை தெளிவாக கண்களுக்குத் தெரிகிறது. அந்தப் பாதையில் பயணிப்பதற்கு பதிலாக இடதுபுறத்தில் திரும்பலாம் என தமிழக அரசும், வலது புறத்தில் திரும்பலாம் என பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் மீண்டும், மீண்டும் தவறாக வழிநடத்திக் கொண்டிருக்கக் கூடாது.
கால்பந்தை போல தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் உதைத்து, உதைத்து விளையாடுவதற்கு வன்னியர்களின் வாழ்க்கையும், எதிர்காலமும் விளையாட்டல்ல. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது கடையில் விலை கொடுத்து வாங்கிய பொருள் அல்ல. துப்பாக்கி குண்டுகளுக்கு 21 உயிர்களை பலி கொடுத்து, பல்லாயிரக்கணக்கானோர் சிறை சென்று, லட்சக்கணக்கான மக்கள் அடக்குமுறைகளை எதிர்கொண்டு வாங்கிய வரம் ஆகும்.
அது சிலரது வஞ்சத்துக்கும் வன்மத்துக்கும் இரையாவதை அனுமதிக்க முடியாது. வன்னியர்களின் வரமான இட ஒதுக்கீட்டை மீட்டெடுப்பதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்வதற்கு பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர்களும் தயாராகவே உள்ளனர்.
அதற்கு இடம் கொடுக்காமல், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த பரிந்துரையை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து விரைவாக பெற்று, சட்டமியற்றி வன்னியர்களுக்கான சமூகநீதியை வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
55 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago