மெட்ரோ ரயில் பணிகள்: சென்னை மாநகரப் பேருந்து வழித்தடத்தில் மாற்றம்

By செ.ஆனந்த விநாயகம்

சென்னை: மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னை மாநகரப் பேருந்து வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வாணுவம்பேட்டைக்கும் மேடவாக்கம் கூட்ரோடுக்கும் இடையேயும், கீழ்கட்டளை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதிகளிலும் சென்னை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு கனரக வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது கீழ்கட்டளையில் இருந்து மடிப்பாக்கம், கைவேலி வழியாக இயக்கப்பட்ட பேருந்துகள் (18டி, 18பி, எம்1, 45ஏசிடி) இன்று முதல் மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கைவேலி வழியாக இயக்கப்படுகின்றன.

மேடவாக்கம் கூட்ரோட்டில் இருந்து கீழ்கட்டளை வழியாக என்.ஜி.ஓ. காலனிக்கு இயக்கப்பட்ட பேருந்து (14எம்) இன்று முதல் மேடவாக்கம் கூட்ரோட்டில் இருந்து ஈச்சங்காடு, காமாட்சி மருத்துவமனை, கைவேலி வழியாக கிண்டி ரயில் நிலையத்துக்கு இயக்கப்படவுள்ளது. மேலும், மேடவாக்கம் கூட்ரோட்டில் இருந்து கீழ்கட்டளை (எஸ்14எம்), மடிப்பாக்கம் கூட்ரோடு வாணுவம்பேட்டை வழியாக என்.ஜி.ஓ.காலனி பேருந்து நிலையத்துக்கு 14எம் வழித்தடத்திலேயே 25 சாதாரண கட்டண நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கீழ்கட்டளை பேருந்து நிலையத்தில் இருந்து மடிப்பாக்கம், கைவேலி வழியாக வேளச்சேரி பேருந்து நிலையத்துக்கு (எம்1சிடி) 5 சாதாரண கட்டண சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. மேடவாக்கம் கூட்ரோடு, கீழ்கட்டளை, மடிப்பாக்கம், கைவேலி வழியாக இயக்கப்பட்ட பேருந்துகள் (76, 76பி, வி51, வி51எக்ஸ்) இன்று முதல் மேடவாக்கம் கூட்ரோடு, ஈச்சங்காடு, காமாட்சி மருத்துவமனை, கைவேலி வழியாக இயக்கப்படுகின்றன.

கீழ்கட்டளையில் இருந்து மூவரசன்பேட்டை, நங்கநல்லூர், ஆலந்தூர் மெட்ரோ வழியாக இயக்கப்பட்ட பேருந்துகள் (எம்18சி, 18என், என்45பி) மூவரசன்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து நங்கநல்லூர், ஆலந்தூர் மெட்ரோ வழியாக இயக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE