பிரதமர் தலைமையில் நடக்க உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு 

By செய்திப்பிரிவு

சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணித்துள்ளதால், பிரதமர் தலைமையில் ஜூலை 27-ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கூறியதாவது: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட், மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு என்னென்ன திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று 2 நாட்கள் முன்னதாக, நான் எனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன்.

3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் உள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதி, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதல், தமிழகத்துக்கு அறிவித்துள்ள ரயில்வே திட்டங்கள், தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மேம்பால விரைவு சாலை திட்ட ஒப்புதல் என சில கோரிக்கைகளை அதில் தெரிவித்திருந்தேன்.

ஆனால், எதையுமே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. மைனாரிட்டி பாஜகவை மெஜாரிட்டி பாஜகவாக ஆக்கிய ஒருசில மாநில கட்சிகளை திருப்திப்படுத்தும் வகையில், ஒருசில மாநிலங்களுக்கு மட்டும் திட்டங்களை அறிவித்துள்ளார்.

அறிவித்துள்ளார்களே தவிர அதையும் நிறைவேற்றுவார்களா? என்பது என்னை பொருத்தவரை சந்தேகம்தான். எப்படி தமிழகத்துக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்துவிட்டு, நிதி ஒதுக்காமல் இன்று வரை ஏமாற்றி வருகிறார்களோ அதேபோல அந்த மாநிலங்களுக்கும் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

தமிழகம் 2 மிகப்பெரிய பேரிடர்களை சந்தித்தது. ரூ.37 ஆயிரம் கோடி வரை இழப்பீடு கேட்டிருந்தோம். தொடர்ந்து வலியுறுத்தி கேட்டு வருகிறோம்.

ஆனால், இதுவரை ரூ.276 கோடிதான் கொடுத்துள்ளார்கள். அதுவும் சட்டப்படி வரவேண்டிய தொகைதான். இதில் வேடிக்கை என்னவென்றால், பாதுகாப்பு துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் வந்து பார்த்துவிட்டுச் சென்றார்கள். இதுதான் தமிழக மக்கள் மீது பாஜக வைத்துள்ள மதிப்பா?

தமிழகத்துக்கான எந்த சிறப்பு திட்டமும் இந்த பட்ஜெட்டில் இல்லை. நம் கோரிக்கை எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. புதிய ரயில்வே திட்டங்களையும் அறிவிக்கவில்லை.

தமிழகம் என்ற சொல்லே பட்ஜெட்டில் இல்லை. பட்ஜெட்டில் இல்லை என்பதைவிட, மத்திய பாஜக ஆட்சியின் சிந்தனை, செயல் அளவிலும் தமிழகம் இல்லை. பாரபட்சமும் ஏமாற்றமும்தான் இந்த அறிக்கையில் உள்ளது.

நீதி இல்லை.. அநீதிதான் அதிகம்: ஒரு நாட்டின் பட்ஜெட் என்பது அந்த நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேணடும். அந்த வகையில் இந்த பட்ஜெட்டில் நீதி இல்லை; அநீதிதான் அதிகம் உள்ளது.

அரசியலை தேர்தல் களத்தில் பார்த்துக் கொள்ளலாம், அனைவரும் இணைந்து நாட்டுக்காக பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் நேற்றுதான் கூறினார்.

ஆனால், அதற்கு மாறாக, இன்று அவரது அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது. வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் நன்மைகள் செய்வதுதான் சிறந்த அரசு. அப்படித்தான் தமிழக அரசின் செயல்பாடு உள்ளது. இதை பார்த்தாவது மத்திய அரசு தன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஜூலை 27-ம் தேதி பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நானும் பங்கேற்க திட்டமிட்டிருந்தேன்.

ஆனால், பட்ஜெட்டில் தமிழகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டிக்கும் வகையில் அந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன்.

எம்.பி.க்கள் இன்று போராட்டம்: தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசின் கூட்டத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதுதான் சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். தமிழகத்தின் தேவைகள், உரிமைகளை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் தொடர்ந்து போராடுவோம். டெல்லியில் நமது எம்.பி.க்கள் 24-ம்தேதி (இன்று) போராட்டம் நடத்த உள்ளனர்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார். செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் உடன் இருந்தனர்.

‘தமிழகம் என்ற வார்த்தையே பட்ஜெட்டில் இல்லை’

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதல்வர் அளித்த பதில்கள் வருமாறு:

நாற்பதுக்கு 40 வெற்றிதான் தமிழகம் புறக்கணிக்கப்படுவதற்கு காரணம் என்று நினைக்கிறீர்களா?

தமிழக மக்கள் மீது அவர்கள் அவ்வளவு ஆத்திரத்தில் இருக்கின்றனர்.

‘‘தமிழகத்தை மிகவும் நேசிக்கிறேன்; தமிழகம் மிகவும் பிடிக்கும்’’ என்று பிரதமர் கூறினாரே?

அவர் தமிழகம் மட்டுமா பிடிக்கும் என்றார். திருக்குறளும் பிடிக்கும் என்றார். ஆனால், திருக்குறள் என்ற வார்த்தையோ, தமிழகம் என்ற வார்த்தையோ பட்ஜெட்டில் இல்லை.

பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத நிலையில், மெட்ரோ உள்ளிட்ட திட்டங்களை தமிழக அரசு எவ்வாறு கையாளும்?

இதுவரை எப்படி கையாண்டோமோ அவ்வாறு கையாள்வோம். தமிழகத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளனர். அதனால்தான், நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கப் போகிறேன்.

இவ்வாறு முதல்வர் பதில் அளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்