மத்திய பட்ஜெட் 2024-ல் வரவேற்கத்தக்க அம்சங்கள்: கோவை தொழில் துறையினர் விவரிப்பு

By இல.ராஜகோபால்

கோவை: மத்திய பட்ஜெட் அறிவிப்புகளுக்கு கோவை தொழில் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேபோல், ஏமாற்றங்களையும் அவர்கள் பதிவு செய்தனர். இந்திய தொழில் வர்த்தக சபை கோவை தலைவர் ஸ்ரீராமலு, துணை தலைவர்கள் ராஜேஷ் லுந்த், துரைராஜ், செயலாளர் அருணாச்சலம், முன்னாள் தலைவர் பாலசுந்தரம், ‘சீமா’ தலைவர் மிதுன் ராமதாஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மத்திய பட்ஜெட்டில் வேளாண் வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது.

வீடு கட்டமைப்பு திட்டங்கள், திறன் மேம்பாடு, மகளிர் சுயஉதவிக்குழு மேம்பாடு, ‘முத்ரா’ கடனுதவி திட்டத்தின்கீழ் கடனுதவி தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிப்பு, ‘சிட்பி’ வங்கி கிளைகள் தொடங்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். காப்பர், 20 வகையான ஸ்கிராப் உள்ளிட்ட மூலப்பொருட்களுக்கு இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது பம்ப் செட் மற்றும் பல்வேறு பொறியியல் பொருட்கள் உற்பத்திக்கு பயன் தரும். மொத்தத்தில் பட்ஜெட் அறிவிப்புகளை வரவேற்கிறோம்,” என்றனர்.

தென்னிந்திய மில்கள் சங்கத்தின்(சைமா) தலைவர் சுந்தரராமன் கூறும் போது, “எம்எஸ்எம்இ துறை வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கிரெடிட் காரண்ட்டி திட்டம் அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. ஸ்பேன்டெக்ஸ் நூல் தயாரிக்க உதவும் மூலப்பொருட்களுக்கு அடிப்படை சங்க வரி 7 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்துள்ளது மிகுந்த பயன் தரும். படஜெட் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது,” என்றார்.

மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின்(ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் கூறும்போது, “விஸ்கோஸ், பாலியஸ்டர் செயற்கை இழைகளுக்கான இறக்குதி வரி நீக்கப்படாதது, ஏற்கெனவே உள்ள தொழில்முனைவோருக்கு எந்த சிறப்பு திட்டங்களும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. சர்வதேச விலையில் மூலப்பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும், ஏற்றுமதியை அதிகரிக்க சலுகைகளை அறிவிக்க வேண்டும்” என்றார்.

இந்திய டெக்ஸ்பிரணர்ஸ் கூட்டமைப்பின் (ஐடிஎப்) கன்வீனர் பிரபு தாமோதரன் கூறும்போது, புதிய வேலைவாய்ப்பு உருவாக்குவதை மையமாக வைத்து ஊக்க சலுகை வழங்கும் திட்டம் ஜவுளி உற்பத்தி தொழிலுக்கு மிகுந்த பயன் தரும். குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான மூலதன கடன்களுக்கு கிரெடிட் கேரன்டி திட்டம் வரவேற்கத்தக்கது. சிரமப்படும் காலங்களில் தொடர்ச்சியாக வங்கி கடன்களை பயன்படுத்தும் திட்டமும் பயன் தரும்,” என்றார்.

‘ஓஸ்மா’ தலைவர் அருள்மொழி கூறும்போது, “உற்பத்தித்துறை நிறுவனங்களில் புதிதாக பணியில் சேருவோருக்கு முதல் மாத ஊதியம் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும், ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கும் திட்டம் உள்ளிட்ட பல அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது,” என்றார்.

‘டான்ஸ்பா‘ பொருளாளர் சாஸ்தா எம்.ராஜா கூறும்போது, “வீடுகளில் சோலார் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் வீடுகளுக்கு 2, 3, 5 கிலோ வாட் வீதம் வழங்கியுள்ளனர். எதிர்வரும் நாட்களில் தன்னிறைவு அடைய பெரிதும் உதவும். சேமிப்பு கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த மானிய திட்டம் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும்,” என்றார்.

‘டீகா’ தலைவர் பிரதீப் கூறும்போது, “சோலார் பேனல் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் உற்பத்திக்கான பொருட்கள் இறக்குமதிக்கு மானியம் வழங்கப்படும். இதனால் சோலார் பேனல் விலை குறையும். சேமிப்பு வசதி மற்றும் சிறிய அளவிலான அனல்மின் நிலையங்கள் அமைக்கவும் ஆராய்ச்சி மேற்கொள்ளவும் உதவி உள்ளிட்டவை மிகவும் வரவேற்கத்தக்கது,” என்றார்.

இந்திய தொழில்கள் கூட்டமைப்பின்(சிஐஐ) கோவை தலைவர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, “அனைத்துத்துறை வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட பட்ஜெட். குறு, சிறு தொழில் நிறுவனங்கள் கடனுதவி பெறுவது எளிமைபடுத்தப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கீடு என அனைத்து துறைக்கும் ஏற்றதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன,” என்றார்.

‘டாக்ட்’ மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறும்போது, “பட்ஜெட் அறிவிப்புகள் குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. வங்கி வட்டி விகிதம் 5 சதவீதமாக குறைத்தல், ஜிஎஸ்டி திட்டத்தில் ஜாப் ஆர்டர்கள் பெற்று செயல்படும் நிறுவனங்களுக்கு 5 சதவீதமாக வரி குறைப்பு, இயந்திரங்கள் கொள்முதலுக்கு 15 சதவீதம் மானியம் வழங்குதல், தொழில்பேட்டை அமைத்தல் உள்ளிட்ட எந்த அறிவிப்புகளும் இல்லை,” என்றார்.

‘காட்மா’ தலைவர் சிவக்குமார் கூறும்போது, “நெருக்கடி காலத்தில் தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் கடனுதவி அளவு ரூ.100 கோடியாக அதிகரிப்பு, தொழில் வளர்ச்சி மற்றும் சொத்துக்களின் அடிப்படையில் கடன் மதிப்பீடு, 100 மாவட்டங்களில் தொழிற்பூங்காக்கள் அமைத்தல், முதல்கட்டமாக 12 பூங்காக்களுக்கு ஒப்புதல் ஆகிய அறிவிப்புகளுக்கு வரவேற்பு. நாடு முழுவதும் சீரான விலையில் மூலப்பொருட்கள் கிடைக்க நடவடிக்கை, நுகர்வோர் வாங்கு திறனை அதிகரிக்க வரி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும்,” என்றார்.

‘கோப்மா‘ தலைவர் மணிராஜ் கூறும்போது, “தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.3 லட்சத்துக்கு மேல் அதிகரிக்கப்படாதது, பம்ப்செட் மீதான வரி குறைக்கப்படாதது, குறு, சிறு தொழில்முனைவோருக்கென பிரத்யேக திட்டம் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது,” என்றார்.

‘லகு உத்யோக் பாரதி’ அமைப்பின் மாநில இணை பொதுச்செயலாளர் கல்யாண்சுந்தரம் கூறும்போது, “மத்திய பட்ஜெட் அனைத்து தரப்பினருக்கும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.17,500 வரை பயன் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ‘சிட்பி’ வங்கி கிளைகள் புதிதாக தொடங்கப்படும், கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ‘பிளக் அண்ட் பிளே’ திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகளை வரவேற்கிறோம்,” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE