டெல்லியில் புதுச்சேரி பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் மீண்டும் முகாம்: பின்னணி என்ன?

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: டெல்லியில் புதுவை பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் மீண்டும் முகாமிட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க மத்திய அமைச்சர் மூலம் விடாமுயற்சியில் உள்ளனர்.

புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலில் ஆளும்கட்சியான என்ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியடைந்தார். தேர்தல் தோல்விக்கு பிறகு என்ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையில் ஏற்கெனவே இருந்த உரசல் பகிரங்கமாக வெடித்துள்ளது. முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்களுக்கு எதிராக பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ அங்காளன் கடுமையாக ஊழல் விமர்சனங்களை முன்வைத்தார்.

முதல்வர் ரங்கசாமிக்கான ஆதரவை வெளியிலிருந்து தருவது உட்பட பல விமர்சனங்களை முன்வைத்த பாஜக எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, அங்காளன், சிவசங்கர், வெங்கடேசன், சீனிவாச அசோக் ஆகியோர் போர்க்கொடி உயர்த்தினர். இது தொடர்பாக டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் மெக்வால், அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்து புகார் அளித்தனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. இதையடுத்து புதுச்சேரி திரும்பினர். அதைத் தொடர்ந்து அதிருப்தி எம்எல்ஏக்களை சமரசம் செய்ய மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா புதுச்சேரி வந்து முயற்சித்தார். ஆனால், அந்த முயற்சி பலனளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க மத்திய அமைச்சர் கிஷண்ரெட்டி வந்தார். அவரிடமும் அதிருப்தி எம்எல்ஏக்கள் புகார் செய்தனர்.

பத்து நாட்களாகியும் மத்திய தலைமை, இவ்விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து டெல்லிக்கு புதுவை பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, அங்காளன், சிவசங்கர் ஆகியோர் மீண்டும் சென்றனர். அவர்கள் இன்று மத்திய அமைச்சர் மெக்வாலை மீண்டும் சந்தித்து பேசினர். தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக நேரம் பெற்றுத்தரும்படி மத்திய அமைச்சர் மெக்வாலிடம் கோரிக்கை மட்டுமின்றி அவர் மூலம் அமித் ஷாவை சந்திக்கவும் முயற்சித்து வருகின்றனர். பட்ஜெட் தாக்கலால் மத்தியில் அமைச்சர்கள் தொடர் பணி சூழலில் இருந்த நிலைியலும், டெல்லியில் முகாமிட்டு இம்முறை அமித் ஷாவை சந்திப்போம் என புதுவை அதிருப்தி எம்எல்ஏக்கள் உறுதியாக உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE