காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தையும் விவசாயத்தையும் பாதுகாக்கும் வகையில் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்கும் பணியை பொதுப்பணித் துறை தீவிரப்படுத்தியுள்ளது. செய்யாற்றில் வெங்கச்சேரி பகுதியில் ஏற்கெனவே ரூ.8 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டு வரும் நிலையில் பாலாற்றில் 2 இடங்களில் ரூ.78 கோடியில் தடுப்பணைகள் கட்டுவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய 3 ஆறுகள் ஓடுகின்றன. வேகவதி ஆறு கழிவுநீர் செல்லும் கால்வாயாக மாறிவிட்ட நிலை யில் பாலாறும், செய்யாறும் விவசாயத்துக்கான முக்கிய ஆதாரங்களாக உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயம் செழிக்க இந்த ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதன்படி செய்யாற்றின் குறுக்கே வெங்கச்சேரியில் ரூ.8 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. செய்யாற்றில் தண்ணீர் வரும்போது இந்த தடுப்பணையில் இருந்து காவாந்தண்டலம் ஏரிக்கு நீர் செல்லும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 1.7 மீட்டர் உயரம் 282 மீட்டர் அகலத்தில் இந்த தடுப்பணை அமைக்கப்படுகிறது. இந்தத் தடுப்பணையில் 2 பாசன மதகுகளும், 2 மணல் போக்கிகளும் அமைக்கப்படுகின்றன.
இந்தத் தடுப்பணை மூலம் வெங்கச்சேரி, அரசாணிப்பாளையம், மாகரல், காவாந்தண்டலம் உட்பட 18 கிராமங்கள் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு தண்ணீர் பெற்று பயனடையும். தடுப்பணை அமைக்கும் பணியை வரும் மழைக் காலத்துக்குள் முடிக்கத் திட்டமிட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
222 கி.மீ. ஓடும் பாலாறு
அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய ஆறான பாலாறு கர்நாடக மாநிலத்தில் 93 கிமீ தூரமும், ஆந்திரத்தில் 33 கிமீ தூரமும், தமிழ்நாட்டில் 222 கிமீ தூரமும் ஓடி காஞ்சிபுரம் மாவட்டம் வாயலூரில் கடலில் கலக்கிறது. 33 கிமீ தூரம் ஆந்திர மாநிலத்தில் ஓடும் பாலாற்றில் 22 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் ஒரே ஒரு தடுப்பணை உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் வள்ளிபுரம், வெங்குடி, உள்ளாவூர், வாயலூர், பழவேரி, பாலூர், வெங்கடாபுரம் ஆகிய 7 இடங்களில் தடுப்பணைகள் அமைக்க ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கடந்த ஆண்டு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். ஆனால் அதன்படி நடவடிக்கை எடுக்காமல் தாமதம் ஏற்பட்டு வந்தது.
ஆய்வுப் பணிகள் நிறைவு
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட 7 இடங்களில் உள்ளாவூர், வள்ளிபுரம் ஆகிய 2 இடங்களில் தடுப்பணைகளை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் முடிந்து அங்கு தடுப்பணைகள் கட்டுவதற்கான ஒப்புதலை பொதுப்பணித் துறை வழங்கியுள்ளது.
இதற்கு நிர்வாக அனுமதி பெறுவதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு சென்னை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும், ஓரிரு வாரங்களில் அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் தொடங்க உள்ளதாக பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, “உள்ளாவூரில் ரூ.44.5 கோடியிலும், வள்ளிபுரத்தில் ரூ.33.5 கோடியிலும் தடுப்பணை கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நிர்வாக அனுமதி கிடைத்து, அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்ட பின்னர் பணிகள் தொடங்கும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago