தமிழகத்தில் சுயசான்று அடிப்படையில் கட்டிடங்களுக்கு 5 ஆண்டுக்கு அனுமதி: விதிகள் என்னென்ன?

By கி.கணேஷ்

சென்னை: சுயசான்று அடிப்படையில் கட்டிடங்களுக்கு ஆன்லைனில் உடனடி அனுமதியளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அனுமதிக்கான காலம் 5 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விதிமீறல்கள் கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 2500 சதுரடி வரையிலான பரப்பில் 3500 சதுரடிக்குள்ளான கட்டிடங்கள் கட்ட, சுயசான்று அடிப்படையில் ஆன்லைனில் உடனடி அனுமதியளிக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த அனுமதியளிக்கும் திட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்த கட்டிட வரைபட அனுமதியானது அளிக்கப்படும் நாளில் இருந்து 5 ஆண்டுகள் வரை செல்லும். இந்த அனுமதியானது, விண்ணப்பதாரர்தான் நிலத்தின் உரிமையாளர் என்பதற்கான எந்த உரிமையையும் உறுதிப்படுத்தாது.

இதனை எந்த விதத்திலும், ஆவணமாக பயன்படுத்த இயலாது. சம்பந்தப்பட்ட நிலம் விவசாய நிலமாகவோ, நிறுவனத்துக்கு சொந்தமானதாகவோ, திறந்த வெளிப்பகுதி, கேளிக்கை பயன்பாட்டுப்பகுதி, சாலைக்கு ஒதுக்கப்பட்டதாகவோ இருந்தால் அனுமதி தானாக ரத்து செய்யப்படுவதுடன், நடவடிக்கை எடுக்கப்படும். ஒருங்கிணைந்த கட்டிட விதிகளின்படியே கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும். விதிமீறல் கண்டறியப்பட்டால், உரிய சட்ட விதிகள்படி நடவடிக்கை எடுக்கப்படும். விண்ணப்பதாரரின் சுய சான்றிட்ட ஆவணங்கள் மற்றும் கட்டிட வரைபட அனுமதி ஆகியவை அதிகாரிகளால் சரிபார்க்கப்பட வேண்டும்.

சுய சான்றிட்ட, சுயமாக எடுக்கப்பட்ட அனுமதியில் ஏதேனும் தவறு கண்டறியப்பட்டால், விண்ணப்பதாரருக்கு உரிய தண்டனை வழங்கப்படும்.விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட வடிவமைப்பு, அடித்தளம், பயன்படுத்தப்படும் மரம், கான்கிரீட், கம்பி உள்ளிட்டவை உரிய விதிகள்படி இருக்க வேண்டும். கழிவுநீர்த்தொட்டி, மழைநீர் சேகரிப்பு அமைப்பு, தண்ணீர் தொட்டி ஆகியவை உரிய விதிகள்படி அமைக்கப்பட வேண்டும். தெருக்களில் கட்டுமானப் பொருட்கள், கழிவுகள் கொட்டப்படக்கூடாது. கட்டுமானப்பணிகள் முடிந்த 30 நாட்களுக்குள் சொத்து வரிக்கான விண்ணப்பம் அளிக்கப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE