நிபா வைரஸ் பரவல் எதிரொலி: கேரள எல்லைப் பகுதியில் கோவை சுகாதாரத் துறை தீவிர சோதனை

By ஆர்.ஆதித்தன்

கோவை: நிபா வைரஸ் பரவல் எதிரொலி காரணமாக தமிழக - கேரளா எல்லைப் பகுதியில் கோவை மாவட்ட சுகாதார துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கேரளாவில் மேலும் சிலருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், தமிழக - கேரளா எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டத்தையொட்டியுள்ள தமிழக - கேரளா எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறையினர் இன்று காலை முதல் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி, வாளையார் சோதனை சாவடியில் மாவட்ட சுகாதாரத் துறை ஊழியர்கள் கவச உடை அணிந்து பேருந்து, கார் மற்றும் வேன், இரு சக்கர வாகனம் உட்பட வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் ஏதேனும் இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்துக்குள் வரும் அனைத்து வழித்தடங்களிலும் சுகாதாரத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகளுடன் வருபவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அறிகுறிகள் என்னென்ன? - முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாசப் பிரச்சினை, மனநலப் பிரச்சினை போன்றவை நிபா வைரஸின் முக்கிய அறிகுறிகளாகும்.
அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் அவரது தொடர்பில் இருப்பவர்களை 21 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். அறிகுறிகள் கண்டறியப்பட்ட நோயாளிகள் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும். காய்கள் மற்றும் பழங்களை நன்றாக கழுவி பயன் படுத்த வேண்டும்.

கிணறுகள், குகைப்பகுதிகள், தோட்டங் கள், இருள் சூழ்ந்த பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். நோயாளிகளை பரிசோதனை செய்யும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொள்ள வேண்டும். ரத்தம், தொண்டை சளி மற்றும் சிறுநீர் மாதிரிகளை பரிசோதனை செய்ய வேண்டும். நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்படும் மாதிரிகளை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாத்து 48 மணி நேரத்துக்குள் ஆய்வகத்துக்கு அனுப்ப வேண்டும். பரிசோதனையின் முடிவுகளை சுகாதாரத்துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE