மர்மமான முறையில் தீப்பற்றி எரியும் வீடுகள் - குறிஞ்சிப்பாடி அருகே கிராம மக்கள் அச்சம்

By செய்திப்பிரிவு

கடலூர்: குறிஞ்சிப்பாடி அருகே கல்குணம் கிராமத்தில் மர்மமான முறையில் இரவு நேரத்தில் வீடுகள் தீப்பற்றி எரிந்து வருகிறது. இதனால் கிராமமக்கள் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கல்குணம் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதமாக இப்பகுதியில் உள்ள வீடுகள் இரவு நேரங்களில் திடீரென தீப்பற்றி எரிந்து வருகின்றன. மர்ம நபர் ஒருவர் வீடுகளை கொளுத்தி செல்வதாக கூறி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த மே 24-ம் தேதி சிவக் குமார் என்பவரது வீடு முதலில் எரிந்தது. இரண்டு நாள் கழித்து சக்திவேல் என்பவரின் வீடு எரிந்தது. இதைத் தொடர்ந்து ஜூன் 24-ம் தேதி புகழ் உத்திராபதி, ஜூலை 12-ம் தேதி தேவநாயகி, 19-ம் தேதி வைரக்கண்ணு என்பவர்களின் வீடுகள் தீப்பற்றி எரிந்தன.

இது மட்டுமல்லாமல் ரமேஷ், வைத்தி, சரவணக்குமார் ஆகியோரின் வைக்கோல் போரும் எரிந்தன. கடந்த இரண்டு மாதகாலமாக மர்மமான முறையில் வீடுகள் தீப்பற்றி எரிந்து வரும் சம்பவம் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் இரவு வேளையில் தூங்காமல் தவிப்பில் உள்ளனர். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

காவல் துறையினர் அப்பகுதியில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம் மர்ம நபர்களை கண்டு பிடிக்கும் முயற்சியிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், “வீட்டை இழந்து பிள்ளைகளை வைத்து மிகவும் கஷ்டப்படுகிறோம். ஏற்கெனவே இயற்கை சீற்றத்தின் அழிவுகள் எங்களை விட்டு வைக்கவில்லை. தற்போது நாங்கள் குடியிருக்கும் வீட்டையும் மர்ம நபர்கள் குறிவைத்து கொளுத்திவிட்டு செல்கின்றனர்.

இன்னும் எத்தனை வீடுகள் எரியப் போகிறது என்று தெரியவில்லை. தினம் தினம் உறக்கத்தை இழந்தும், வேலை வாய்ப்புகளை இழந்தும், வருமானம் இன்றி வேதனைப்பட்டு வருகின்றோம். வீட்டை கொளுத்திவிட்டு செல்லும் மர்ம நபரை அடையாளம் கண்டு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் ஊரில் இரவு நேரங்களில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE