ஓசூர் அம்மா உணவகங்களில் தரமில்லாத உணவு வழங்கல்: மக்கள் குற்றச்சாட்டு

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: ஓசூர் அம்மா உணவகங்களில் தரமில்லாத உணவு மற்றும் சுத்திகரிக்கப்படாத குடிநீர் வழங்குவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஏழை, எளிய மக்கள் பயன் அடையும் வகையில் ஓசூர் பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை அருகே ஏரித் தெரு பகுதியில் மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. இங்கு தினமும் ஏராளமான தொழி லாளர்கள் மற்றும் பொதுமக்கள் மலிவு விலையில் உணவுகளைச் சாப்பிட்டு வருகின்றனர்.

உரிய நடவடிக்கை தேவை: இந்நிலையில், அம்மா உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்குத் தரமில்லாத உணவு மற்றும் பாதுகாப்பற்ற குடிநீர் வழங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இங்கு தரமான உணவு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறியதாவது: ஓசூர் மாநகராட்சி பகுதியில் இரு இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் நூற்றுக்கணக்கான ஏழை மக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.

கேள்விக்குறியாகும் தரம்: குறிப்பாக பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவகத்தில் பேருந்து நிலையத்துக்கும் வரும் ஏழை எளிய பயணிகள் அதிகளவில் வந்து சாப்பிடுகின்றனர். இதேபோல, ஏரித்தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களும், பல்வேறு பணிகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் சாப்பிட்டு வருகின்றனர். இங்கு குறைந்த விலைக்குக் கிடைக்கும் உணவுகளை நாடி வரும் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் கேள்விக்குறியாக உள்ளது. மலிவு விலையில் கிடைப்பதால், வேறு வழியின்றி இங்கு வருவோர் தங்களின் நிலையை எண்ணி வருந்திச் சாப்பிட்டுச் செல்லும் நிலையுள்ளது.

கஞ்சிபோல கலவை சாதம்: குறிப்பாக, இங்கு வழங்கப்படும் தயிர் சாதம் மற்றும் சாம்பார் சாதம் தரமின்றி கஞ்சிபோல உள்ளது. அதேபோல, இரு அம்மா உணவகங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இல்லாததால், தண்ணீர் வழங்க டேங்க் வைத்துள்ளனர். அதில் வாரத்துக்கு ஒருமுறை தண்ணீர் நிரப்பி அந்த தண்ணீரைச் சாப்பிட வரும் பொதுமக்களுக்கு வழங்குகின்றனர்.

அந்த தண்ணீர் டேங்க் சுத்தமின்றி தூசி படர்ந்து உள்ளது. அந்த தண்ணீரைத்தான் பொதுமக்கள் பருகிச் செல்கின்றனர். இதனால், பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகிறது. அம்மா உணவகங்களை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. இதனால் தரமற்ற உணவு, சுகதாரமற்ற குடிநீர் வழங்கப்படுகிறது. எனவே, இரு அம்மா உணவகங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் தரமான உணவுகள் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, சுகாதாரமான முறையில் உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE