சென்னையில் 14 நாட்களில் 11 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகரில் கடந்த 14 நாட்களில் 11 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையாளர் அலவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், நடப்பாண்டில் 01.01.2024 முதல் 21.07.2024 வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சட்டம் ஒழுங்கு குற்றங்களில் ஈடுபட்ட 411 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 130 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 173 குற்றவாளிகள், குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 29 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 5 குற்றவாளிகள், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் 7 குற்றவாளிகள், பாலியல் தொழில் நடத்திய 16 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம்படுத்திய 5 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் 4 குற்றவாளிகள் என மொத்தம் 780 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.அருண், உத்தரவின்பேரில் கடந்த 08.07.2024 முதல் 21.07.2024 வரையிலான 14 நாட்களில் 11 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குற்றவாளிகள் 1.கார்த்திக் கிரண், வ/31, த/பெ.சண்முகராஜ், மாங்காடு, சென்னை என்பவர் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 14.07.2024 அன்று K-4 அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். 2.அசோக்குமார், வ/34, த/பெ.ரவிச்சந்திரன், சாலிகிராமம், சென்னை 3.மகேஷ், வ/44, த/பெ.ஞானமுத்து, மடிப்பாக்கம், சென்னை. 4.மணிகண்டன் (எ) மணி, வ/34, த/பெ.ஏழுமலை, கே.கே.நகர், சென்னை ஆகிய மூவரும் கடந்த 11.06.2024 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக K-8 அரும்பாக்கம் காவல் நிலையத்திலும் 5.அருள், வ/38, த/பெ.இராவணன், கொசப்பேட்டை, சென்னை என்பவர் கடந்த 08.06.2024 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக P-2 ஓட்டேரி காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும், 6.கிஷோர்குமார், வ/25, த/பெ.லஷ்மணன், கொருக்குப்பேட்டை, சென்னை, 7.ஜெகன் (எ) ஜெகன்னாத யாதவ், வ/24, த/பெ.ஜெயராமன், தண்டையார்பேட்டை, 8.தமிழ் (எ) தமிழ்செல்வன், வ/23, த/பெ.முருகவேல், தண்டையார்பேட்டை, 9.பாலாஜி, வ/23, த/பெ.முனியேந்திரன், தண்டையார்பேட்டை ஆகிய நால்வரும் 11.06.2024 அன்று தர்மா என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக H-6 ஆர்.கே.நகர் காவல் நிலையத்திலும், 10.முருகன், வ/21, த/பெ.தனசேகர், காரம்பாக்கம், போரூர், சென்னை என்பவர் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொளுத்தி வீசியதற்காக R-9 வளசரவாக்கம் காவல் நிலையத்திலும், 11.ரமேஷ், வ/32, த/பெ.மகாலிங்கம், கொட்டிவாக்கம், சென்னை என்பவர் வீடு புகுந்து திருடிய குற்றத்திற்காக M-3 புழல் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேற்படி குற்றவாளிகளின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.அருண், மேற்படி குற்றவாளி கார்த்திக் கிரணை கடந்த 14.07.2024 அன்றும், அசோக்குமார், மகேஷ், மணிகண்டன் (எ) மணி, அருள் ஆகிய 4 நபர்களை கடந்த 16.07.2024 அன்றும், கிஷோர்குமார், ஜெகன், தமிழ் (எ) தமிழ்செல்வன், பாலாஜி, முருகன், ரமேஷ் ஆகிய 6 குற்றவாளிகளை கடந்த 18.07.2024 அன்றும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், மேற்படி 11 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டுக் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE