“அதிமுகவில் புதுப் பிரச்சினை உருவாக்க விரும்பவில்லை” - திருநாவுக்கரசு

By என். சன்னாசி

மதுரை: நான் காங்கிரஸ் கட்சியில், வேறு கூட்டணியில் இருக்கும்போது அதிமுகவையோ, சசிகலாவையோ விமர்சித்துப் பேச விரும்பவில்லை. தேவையென்றால் நானே பேசுவேன் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு நாளையொட்டி, மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகிலுள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் இன்று (ஞாயிற்றுகிழமை) மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது; 2026-ல் திமுக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெறுவது குறித்த கார்த்திக் சிதம்பரம் பேசியுள்ளார்.

மாநிலத்தில் திமுக பெரும்பான்மை கட்சி. தேசிய அளவில் காங்கிரஸ் பெரும்பான்மை உள்ள கட்சி. காங்கிரஸ் - திமுகவிற்கு இடையே கூட்டணி பகிர்வு நல்ல முறையில் உள்ளது. திமுக தனி மெஜாரிட்டி இல்லாதபோது, காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை. வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தது. அமைச்சரவையில் இடம் என்பது எம்எல்ஏ எண்ணிக்கையில் பற்றாக்குறை ஏற்பட்டால் அந்தப் பிரச்சினை வரும்.

காங்கிரஸ் கட்சி 2026-ல் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என, பேசுவது குற்றமாகாது. இதையெல்லாம் சொல்லாமல் எப்படி கட்சியை வளர்க்க முடியும்? அதற்காக கட்டாயமாக அமைச்சரவையில் இடம் பெற்றே ஆக வேண்டும் என, சொல்ல முடியாது, அவ்வாறு பேசுவதை தவறு எனவும் சொல்ல இயலாது.

இந்தியா முழுவதும் ஒரே நாடு. மாநிலம் முழுவதும் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை, அதிக இடம் கொடுக்க வேண்டும் என்பது மாநில அரசு விருப்பமாக இருக்கலாம். மாநில மக்களுக்கே 100% வேலை வாய்ப்பு எனக் கூறுவது தவறு. பிறகு இந்தியா எப்படி ஒற்றுமையான நாடாக இருக்கும். மற்ற மாநிலங்கள், பிற மொழி பேசும் மக்களுக்கு வாய்ப்பு இல்லை என்பது சரியான கருத்து இல்லை.

அதிமுகவில் ஏற்கனவே பல பிரச்சினைகள் நடக்கும்போது, நான் எதையாவது சொல்லி ஒரு புது பிரச்சினை உருவாக்க விரும்பவில்லை. நான் காங்கிரஸ் கட்சியில், வேறு கூட்டணியில் இருக்கும்போது அதிமுகவையோ , சசிகலாவையோ விமர்சித்து பேச விரும்பவில்லை. தேவையென்றால் நானே பேசுவேன்.

தமிழகத்தில் காமராஜர் ஆட்சி உருவாக வேண்டும் எனப் பேசினேன். நான், தங்கபாலு , இளங்கோவன் என எல்லா தலைவர்களும் சொன்னதை தற்போதைய தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகிறார். திமுகவுக்கும், செல்வப்பெருந்தகைக்கும் காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் சண்டை என்பது கிடையாது.

திமுகவோடு காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. எம்எல்ஏ, எம்பி தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம். ராகுல் காந்தி பிரதமராகவேண்டும் என , முதன் முதலில் குரல் கொடுத்தவர் ஸ்டாலின். கல்யாணம் செய்து குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும்போது, இன்னொருவரை காட்டி அவரை கல்யாணம் செய்து கொள்வீர்களா? எனக் கேட்பது போல உள்ளது.

அதிமுகவுடன் கூட்டணியா என்ற கேள்வி தவறானது. மக்களை வலிமைப்படுத்திய பிறகு மத்திய, மாநில அரசுகள் கட்டணத்தை உயர்த்தலாம். மின் கட்டண உயர்வு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE