திமுக அரசுக்கு எதிரான கோபத்தை மக்கள் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள்: ஓபிஎஸ்

By என். சன்னாசி

மதுரை: திமுக அரசுக்கு எதிரான கோபத்தை மக்கள் வரும் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் மதுரையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பத்தாண்டுகளில் இந்தியா தன்னிறைவு பெறும் நாடாக இருக்கும், என, ஏற்கெனவே பிரதமர் மோடி தெரிவித்தார். அதன் அடிப்படையில் நடப்பாண்டு பட்ஜெட் அறிக்கை இருக்கும் என, எதிர்பார்க்கலாம்.

மின்கட்டண உயர்வால் ஏழை முதல் மேல்தட்டு மக்கள் வரையிலும் மிகப்பெரிய சுமையை திமுக அரசு தந்துள்ளது. இது அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும். காவிரி பிரச்சினையில் , முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீரை சட்டபூர்வமாக உச்ச நீதிமன்றம் வரையிலும் சென்று போராடி, வாதாடி பெற்றுத் தந்தார்.

இதை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு ஆளும் மாநில அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் உண்டு. அவர் இண்டியா கூட்டணியில் இருப்பதால் தனக்கான செல்வாக்கை பயன்படுத்தி, கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து உரிய நீரை தமிழகத்துக்கு பெற்றுத் தருவதில் முனைப்பு காட்டவேண்டும்.

2026-ல் சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியை தொடரும் என்பதெல்லாம் முடியாது. அனைத்து கட்சிகளும் நாங்களே மீண்டும் வெற்றி பெறுவோம் என, கூறுவது வாடிக்கை. தேர்தல் முடிவு, இறுதித் தீர்ப்பு மக்களுடையது. அம்மா உணவகத்துக்கு ரூ. 21 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.

ஆனால் அம்மா உணவகம் மட்டுமின்றி அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கிய திட்டங்கள் அனைத்துமே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. திமுக அரசுக்கு எதிராக மக்கள் கோபத்தில் இருக்கின்றனர். அது வரும் தேர்தலில் வெளிப்படும். இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE