தமிழகத்தில் இன்று முதல் 27-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

By ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 21) முதல் வரும் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜார், மேல் கூடலூரில் தலா 6 செமீ, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 4 செமீ, சின்கோனா, சோலையார், வால்பாறை, நீலகிரி மாவட்டம் சாம்ராஜ் எஸ்டேட் ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

ஒடிசா மாநில கடற்கரையை ஒட்டிய சில்கா ஏரி அருகில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலு குறைந்து ஒடிஷா மற்றும் அதனை ஒட்டிய சத்தீஸ்கர் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது.

இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23 முதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று முதல் 25-ம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்தி்க்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE