சென்னை மெட்ரோ தானியங்கி கட்டண வசூலில் கோளாறு - பயணிகள் அவதி

By செய்திப்பிரிவு

சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களின் கட்டண வசூல் முறையில், அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுகிறது. இதனால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.

சென்னையில் தற்போது இரண்டு வழித் தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதிகாலை 5 முதல் இரவு 11.30 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயங்குவதால், பயணிகள் நெரிசல் இன்றி விரைவாகவும், ‘ஏசி’ வசதியுடன் சொகுசாகவும் பயணம் செய்ய முடிகிறது. ஆனால், சமீபகாலமாக கட்டண வசூல் முறையில் அடிக்கடி கோளாறு ஏற்படுகிறது.

தொழில்நுட்ப பிரச்சினை: இதனால், மெட்ரோ ரயில் நிலையங்களில், ஸ்டேடிக் ‘க்யூ.ஆர்’ மற்றும் வாட்ஸ்-ஆப், ஜி.பே., பேடிஎம் வாயிலாக டிக்கெட் பெறும் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஆயிரம் விளக்கு, கிண்டி,விமான நிலையம், ஆலந்தூர், சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுகிறது. இரவு 8:00 மணிக்கு மேல் அடிக்கடி பிரச்சினை ஏற்படுவதால், கையில் பணம் இல்லாத பயணிகள் திரும்பி செல்லும் நிலை ஏற்படுகிறது.

டிஜிட்டல் பரிவர்த்தனை: இது குறித்து, மெட்ரோ ரயில் பயணிகள் சிலர் கூறியதாவது: பயணிகள் நெரிசல் இன்றி விரைவாக பயணிக்க மெட்ரோ ரயில் வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால், க்யூ.ஆர்’ டிக்கெட் எடுக்கும் வசதியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது சிரமமாக இருக்கிறது. இந்த கோளாறால், கவுன்ட்டர்களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

டிஜிட்டல் பரிவர்த்தனையை நம்பிவரும் பயணிகள் ஏமாற்றத்துடன், திரும்பி செல்ல வேண்டியுள்ளது. எனவே, இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறு ஏற்படாத வகையில், நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE