“அதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுப்போரை ரவுடி என்பதா?” - பா.ரஞ்சித் ஆவேசம்

By செய்திப்பிரிவு

சென்னை: பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்துக்கு நீதி கேட்டு சென்னையில் நடைபெற்ற பேரணியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். அவரது மரணத்துக்கு நீதி கேட்டு, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னை எழும்பூரில் நேற்று பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள், நேர்மையான முறையில் வழக்கை விசாரிக்க வேண்டும் என பதாகைகள் மூலமாகவும், முழக்கங்களை எழுப்பியும் வலியுறுத்தினர்.

நீதி கிடைக்கும் வரை: தொடர்ந்து நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் பா.ரஞ்சித் பேசும்போது, ‘‘ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம். அதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ரவுடி என்பதா? அப்படி என்றால் நாங்கள் ரவுடிகள்தான். அறவழியில் போராடிக் கொண்டிருக்கும் எங்களைக் காயப்படுத்த வேண்டாம். ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல மறைமுக சூழ்ச்சிகள் இருக்கிறது. உண்மை குற்றவாளிகளை காவல்துறை கண்டறிய வேண்டும். ஆம்ஸ்ட்ராங்குக்கு சென்னையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்’’ என்றார்.

நிகழ்வில், பகுஜன் சமாஜ் தேசிய ஒருங்கிணைப்பாளர் கோபி நாத், தமிழக காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் எம்.பி ரஞ்சன் குமார், நீதிபதி அரி.பரந்தாமன், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை.ஜெகன் மூர்த்தி, இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன், சமூக சமத்துவப் படை தலைவர் சிவகாமி, நடிகர்கள் மன்சூர் அலிகான், தினேஷ், கானா கலைஞர்கள் சங்கம், தமிழக அரசு எஸ்சி, எஸ்டி அலுவலர் நலச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE