2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் திமுக: 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி உள்ளிட்ட 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

`தேர்தல்களில் திமுக கூட்டணிக்கு தொடர் வெற்றி கிடைத்து வரும் நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் எளிதாக வெல்லலாம் என்ற அலட்சியம் கூடாது, எதிர்க்கட்சிகளை பலவீனமாக கருதக் கூடாது, இலக்கு நோக்கி, திட்டமிட்டுப் பயணிக்க வேண்டும்' என்று கட்சி நிர்வாகிகளிடம் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது

மக்களவை தேர்தலில் சிறப்பான பணி: இதற்கிடையில், சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை திமுக தற்போதே தொடங்கிவிட்டது. இதற்காக ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மக்களவைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழு, தனது பணிகளை மிகச் சிறப்பாகச் செய்தது. அந்த வகையில், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கட்சியில் மேற்கொள்ள வேண்டியமாறுதல்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளை கட்சித் தலைவருக்கும், தலைமைக்கும் பரிந்துரைக்கவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படுகிறது.

இந்தக் குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE