அம்மா உணவகங்களுக்கு விடிவு எப்போது? - பிரச்சினையும் காரணமும் | HTT Explainer

By வி.சீனிவாசன்

சேலம்: ‘அம்மா உணவகங்களுக்கு அன்றாடம் மாநகராட்சி நிர்வாகம் செலவு செய்தாக வேண்டிய கட்டாயத்தால் சம்பளம், ஓய்வூதியம் குறித்த ஆகியவை காலத்தில் வழங்காமல் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது. எனவே, மாநகராட்சி, நகராட்சிகளுக்கு அம்மா உணவக செலவுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கினால் மட்டுமே மாதம்தோறும் நிலுவையில்லாமல் ஊழியர்கள் சம்பளம் பெற விடிவு பிறக்கும்” என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி சென்னை சாந்தோமில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா மலிவு விலையில் ஏழை, எளிய மக்கள் வயிறார சாப்பிட வேண்டி அம்மா உணவகத்தை திறந்து வைத்தார். பின்னாளில், அது மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் திறக்கப்பட்டு, மக்களின் வரவேற்புடன் நடந்து வருகிறது. அம்மா உணவகங்களில் இட்லி ரூ.1, சாம்பார் சாதம் ரூ. 5, தயிர் சாதம் ரூ.3 என்ற விலைகளில் விற்கப்படுகிறது.

மாநிலம் முழுவதும் அம்மா உணவக செலவுகளை உள்ளாட்சி அமைப்புகள் ஏற்று நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், மாநகராட்சி, நகராட்சிகளில் இயங்கும் அம்மா உணவகத்துக்கு தேவையான காய்கறி, அரிசி, பருப்பு, ஆள் சம்பளம், சமையல் எரிவாயு சிலிண்டர் செலவு உள்ளிட்ட சகல செலவுகளையும் உள்ளாட்சி அமைப்புகள் நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது. மக்களிடம் வரி வசூலிக்க திணறி வரும் உள்ளாட்சி பணியாளர்கள், கிடைக்கும் சொற்ப வசூல் பணத்திலும், அம்மா உணவக செலவுகளை ஏற்று நடத்துவதால், கடும் நிதி நெருக்கடியில் உள்ளாட்சி அமைப்புகள் சிக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், உள்ளாட்சி பணியாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் சம்பளம், ஓய்வூதிய பலன், ஓய்வூதிய தொகை வழங்க முடியாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து சேலம் மண்டல மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்கத்தின் தலைவர் வெங்கடாசலம் கூறியது: “அம்மா உணவக திட்டம் தொடங்கிய காலம் முதல் இப்போது வரை மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி நிர்வாகம் செலவிட உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், தற்போது அம்மா உணவக திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த சென்னை மாநகராட்சிக்கு ரூ.450 கோடி அரசு நிதி ஒதுக்கி உள்ளது வரவேற்புக்குரியது. இத்திட்டத்தை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்குவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இத்திட்டம் தமிழக மக்களின் நல்ல ஆதரவை பெற்றதுடன் ஏழை மக்கள் மட்டும் அல்லாமல் ஏழைத் தொழிலாளிகள் பலர் பயன் அடைந்து வருகின்றனர்.

ஆனால், அம்மா உணவக திட்டத்துக்கான கட்டிடம் முதல் அன்றாட உணவு செலவு வரை மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதனால், மாநகராட்சி நிர்வாகத்துக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு, ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதிய தொகை குறித்த காலத்தில் வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். எனவே, தமிழக அரசு சத்துணவு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது போல், மாநகராட்சி, மற்றும் நகராட்சிகளுக்கு அம்மா உணவகத்துக்கான செலவு தொகைக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்போது தான், மாநகராட்சி மற்றும் நகராட்சியில் பணியாற்றும் பணியாளர்கள் சம்பளம், மாதாந்திர ஓய்வூதியம் நிலுவை இல்லாமல் கிடைக்க விடிவு பிறக்கும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE