“ஐகோர்ட் மதுரை அமர்வின் தீர்ப்புகள் மூலம் சமூக மாற்றம்” - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெருமிதம்

By கி.மகாராஜன் 


மதுரை: “சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு அளித்த தீர்ப்புகள் சமூக மாற்றத்தை ஏற்படுத்தியது,” என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மதுரை உலகநேரியில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு 24.7.2004-ல் தொடங்கப்பட்டது. இங்கு மதுரை உட்பட 14 மாவட்டங்களை சேர்ந்த வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. மதுரை அமர்வின் 20 ஆண்டு நிறைவு விழா மதுரை தமுக்கம் மாநாட்டு அரங்கில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் வரவேற்றார். விழாவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தொடங்கி வைத்து, உயர் நீதிமன்ற அமர்வு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 20-வது ஆண்டு நினைவுத் தூணை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியது: “மதுரை தூங்கா நகரம், 24 மணி நேரமும் தூங்காமல் இருக்கும் நகரம். கடந்த 20 ஆண்டுகளில் கலச்சாரத்தின் அடையாளமாகவும் மதுரை அமர்வு திகழ்ந்து வருகிறது.

அனைத்து நிலைகளில் இருப்பவர்களுக்கும் நீதி கிடைப்பதை மதுரை அமர்வு உறுதி செய்துள்ளது. மதுரை அமர்விலிருந்து சில நல்ல நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்துக்காக எடுத்துக் கொண்டோம். அதற்காக வழக்கறிஞர் சங்கங்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவுகள் சமூக மாற்றத்தையும் வழங்கியுள்ளது. மதுரை அமர்வு பல்வேறு துறைகளில் சிறந்த தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

மனித உரிமைகள், பெண்கள் பாதுகாப்பு, திருநங்கை பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் மதுரை அமர்வு அளித்த தீர்ப்புகள் சமூக மாற்றத்தை ஏற்படுத்தியது. பசுமையான அமர்வு, அனைத்து அடிப்படை வசதிகள், நவீன வசதிகள் மதுரை அமர்வில் உள்ளன. இளம் வழக்கறிஞர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொண்டுள்ளனர். வருங்காலத்தில் டெல்லி வழக்கறிஞர்கள் மதுரை வழக்கறிஞர்களை தேடும் நிலை ஏற்படும்.

நீதிமன்றங்களில் மொழி ஒரு சிக்கலாக எழுந்த போது, நீதிமன்ற உத்தரவுகளை அந்தத்த மாநில மொழிகளில் அறிந்து கொள்ளும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் விளைவாக இரண்டாயிரத்துக்கும் அதிகமான உத்தரவுகள் மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இளம் வழக்கறிஞர்களுக்கு முதல் 2 ஆண்டுகள் கற்கும் காலம். அந்த 2 ஆண்டுகள் இளம் வழக்கறிஞர்களுக்கு மூத்த வழக்கறிஞர்கள் தொழில் கற்றுத்தர வேண்டும். நல்ல ஊதியம் வழங்க வேண்டும். நீதிமன்றத்துக்கு ஒரு வழக்கு வரும்போது அது சமூகத்தின் பிரச்சினையை முன்னிருந்தும் விதமாகவே அமைகிறது.

உலகின் முதல் பெண் வழக்கறிஞர் மதுரையைச் சேர்ந்த கண்ணகி. 1500 ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த தமிழ் இலக்கிய கதாநாயகி கண்ணகி, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக பாண்டியன் நெடுஞ்செழியனிடம் வாதாடினார். மதுரையில் ஆண்டுக்கு 4 மாதம் மீனாட்சியம்மன் ஆட்சி நடைபெறும். இந்த 21-ம் நூற்றாண்டில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கேட்டு வலியுறுத்தி வருகிறோம். ஆனால் மதுரையில் அப்போதே அன்னை மீனாட்சிக்கு மூன்றில் ஒரு பங்கு அரசியல் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்தளவுக்கு சிறப்பு மிக்க நகரம் மதுரை,” என்று தலைமை நீதிபதி பேசினார்.

காணொலி காட்சி வழியாக, ‘மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு’- தமிழ் பெயர் பலகையை திறந்து வைத்து உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசுகையில்,“மதுரை அமர்வு 20 ஆண்டுகளாக மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த பாராட்டு உத்வேகம் அளிப்பதாக இருக்கும். அதே நேரம் நாம் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் சிந்திக்க வேண்டும். உயர்நீதிமன்ற மதுரை அமர்வு என்று சொல்வதை விட மதுரை உயர் நீதிமன்றம் என சொல்வதே சிறப்பாக இருக்கும்,” என்றார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி கே.வி.விஸ்வநாதன் பேசுகையில், “மதுரை சரித்திரம் படைத்த நகர். அநீதி எங்கு நிகழ்ந்தாலும் அதை தட்டிக் கேட்கும் மாநகரமாக மதுரை உள்ளது. கண்ணகிக்கு அநீதி இழைக்கப்பட்டதை சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அழகாக குறிப்பிட்டிருப்பார். அந்த வகையில் நீதியை மக்களின் வீட்டு வாசலில் கொண்டு போய் சேர்க்கும் வகையில் மதுரை அமர்வு அமைக்கப்பட்டது. இது சாதாரண விஷயம் அல்ல.

மதுரை அமர்வு அமைக்கப்பட்டதன் நோக்கம் சரியாக பயன்படுத்தப்பட்டு மக்களின் நம்பிக்கை பெறப்பட்டுள்ளது. மதுரை அமர்வின் கொடி இன்னும் உயர பறக்க வேண்டும். மதுரை அமர்வு வெற்றியை எட்டிபிடித்த போதிலும், சுய பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டும். தவறு இருந்தால் சரி செய்து கொள்ள வேண்டும். மதுரை அமர்வில் எதிர்காலம் இளம் வழக்கறிஞர்கள் கையில் இருக்கிறது. இளம் வழக்கறிஞர்களை மூத்த வழக்கறிஞர்கள் வேலையில் அமர்த்த வேண்டும். இதற்காக மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் குழு அமைக்க வேண்டும். தற்போது சிபாரிசு அடிப்படையில் இளம் வழக்கறிஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

பல திறமை மிக்க இளம் வழக்கறிஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இளம் வழக்கறிஞர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். இப்பழக்கம் 10, 12 ஆண்டுகளில் ஒரு வழக்கை எப்படி கையாள வேண்டும் என்பதை தெளிவுபடுத்தும். வழக்கறிஞர்கள் தொடர்ந்து பயின்று, சட்டத்துறையில் புலமை பெற வேண்டும். அந்த புலமையால் நீதிபதிகள் நல்ல தீர்ப்பை வழங்க வழக்கறிஞர்கள் உதவ முடியும்,” என்றார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பேசுகையில், “மதுரை அமர்வு வரலாற்றில் இது மிக முக்கியமான நாள். மதுரை அமர்வின் 20 ஆண்டு வரலாறு நீதியை நிலைநாட்டுவதில் உள்ள ஈடுபாட்டை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மதுரை அமர்வின் வரலாற்றில் இது ஒரு மைல்கல். கடந்த 20 ஆண்டுகளில் 12 லட்சத்துக்கும் அதிக வழக்குகளின் தீர்வு காணப்பட்டுள்ளது. 77,751 வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. இது அமர்வின் செயல் திறனுக்கு சான்றாக அமைந்துள்ளது. அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய பல்வேறு தொழில்நுட்பங்கள் கையாளப்படுகிறது. மக்களின் நம்பிக்கையின் அடையாளமாக மதுரை அமர்வு திகழ்கிறது,” என்றார்.

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் பேசுகையில், “மதுரை உட்பட 14 மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு 24.7.2004-ல் தொடங்கப்பட்டது. இந்த அமர்வால் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிப்பளு குறைந்துள்ளது. இந்த 20 ஆண்டுகளில் பல்வேறு சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளது. அமர்வு தொடங்கும் போது 3 நீதிபதிகள் இருந்தனர். தற்போது 20 நீதிபதிகள் உள்ளனர். நாட்டில் சிறந்த உயர் நீதிமன்றமாக மதுரை அமர்வு விளங்கி வருகிறது. மதுரை அமர்வு வளாகத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும், நவீன வசதிகளும் உள்ளன.

உயர் நீதிமன்றத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள், கூடுதல் வசதிகள் ஏற்படுத்த தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. மதுரை அமர்வுக்கு முன்புள்ள நிலத்தில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த அரசு சமீபத்தில் ரூ.11.20 கோடி நிதி ஒதுக்கியது. இந்த 20 ஆண்டுகளில் மதுரை அமர்வு 12.30 லட்சம் வழக்குகளை விசாரித்து முடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 106 சதவீத வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. 77,751 வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளது” என்று அவர் பேசினார்.

மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், தமிழக அரசின் தலைமை அரசு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் ரவீந்திரன், நீலகண்டன், வீராகதிரவன், பாஸ்கரன், அரசு பிளீடர் திலக்குமார், உதவி சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தராஜ், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன் மற்றும் அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், சட்டக்கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்