‘‘முதல்வரின் பெருந்தன்மையை பாராட்ட எதிர்க்கட்சித் தலைவருக்கு மனமில்லை’’ - மேயர் பிரியா விமர்சனம்

By செய்திப்பிரிவு

சென்னை: “திமுக ஆட்சியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அம்மா உணவங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்த முதல்வரின் பெருந்தன்மையை பாராட்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை,” என்று சென்னை மேயர் பிரியா விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “திமுக ஆட்சியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அம்மா உணவங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்த முதல்வரின் பெருந்தன்மையை பாராட்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை. கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தின் தனிப் பெருந்தலைவராக, மக்கள் நலன் ஒன்றையே மனதில் வைத்து நாளும் தொண்டாற்றும் மனிதநேயராக முதல்வர் திகழ்கிறார். அவரது அகராதியில் அரசியல் காழ்ப்புணர்வு என்ற சொல்லோ, சிறுமதியோ ஒருநாளும் இருந்தது இல்லை.

திமுக அரசால் தொடங்கப்பட்டது என்பதற்காகவே புதிய தலைமைச் செயலகம் உட்பட அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை எத்தனை என்பதை மக்கள் அறிவர். அதனைப் பற்றி கொஞ்சமும் கூச்சமின்றி பொறாமையிலும் ஆற்றாமையிலும் எதிர்க்கட்சித் தலைவர் புலம்பித் தவிக்கிறார்.” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, அம்மா உணவகங்கள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், “ஜெயலலிதா ஆட்சியில் 2021 மே மாதம் வரை, குறிப்பாக கரோனா பெருந்தொற்றுக் காலங்களில் நகரப் பகுதிகளில் வாழ்ந்த ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் உழைப்பாளர்களது அன்னலட்சுமியாக தமிழகம் முழுவதும் சுமார் 664 அம்மா உணவகங்கள் நகரப் பகுதிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் திறக்கப்பட்டு நல்ல முறையில் செயல்பட்டு வந்தன.

அம்மா உணவங்களில் விற்கப்படும் உணவு வகைகளின் சுவை மற்றும் தரத்தை ஜெயலலிதாவும் , அம்மா அரசு ஆட்சி செய்தபோது நானும், அமைச்சர் பெருமக்களும் அவ்வப்போது நேரில் ஆய்வு செய்தோம். சுவை மற்றும் தரத்தை ஆய்வு செய்தபின் தக்க ஆலோசனைகள் வழங்கி அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டன என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

2021-ல் ஆட்சிமாற்றத்திற்குப் பிறகு அம்மா உணவகங்களை திமுக நிர்வாகிகள் கடப்பாரை போன்ற ஆயுதங்களால் இடித்துத் தள்ளினார். அம்மா உணவகங்களில் பணிபுரிந்தவர்களை மூன்றில் ஒரு பங்காக குறைத்தும், அம்மா உணவகங்களை நடத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்காமலும், தேவையான அரிசி, காய்கறிகள், பருப்பு வகைகள், எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களை தரமாக வழங்காமல், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் உழைப்பாளிகள் வயிராற உண்ணும் உணவின் தரத்தைக் குறைத்து பல அம்மா உணவகங்களுக்கு மூடு விழாவும் நடத்தியது திமுக அரசு.

திமுக அரசின் மேற்கண்ட செயல்பாட்டினை உடனடியாக அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் வாயிலாக கடுமையாக எதிர்த்தேன். அதனையடுத்து, அம்மா உணவகங்களை மூடும் முயற்சியை தற்காலிகமாக நிறுத்தியது திமுக அரசு.

உண்மை நிலை இவ்வாறு இருக்க, நிர்வாகத் திறனற்ற திமுக அரசின் முதலமைச்சர் 19.7.2024 அன்று, தனது எக்ஸ் வலைதளத்தில் அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் எனப் புரளிகளைக் கிளப்பியதாக முதலைக் கண்ணீர் வடித்துள்ளார். மேலும், தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் ஆய்வு மேற்கொண்டு, மக்களிடம் உணவின் தரம் குறித்தும்; அங்குள்ள பணியாளர்களிடம் அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்ததாக குறிப்பிட்ட திமுக அரசின் முதலமைச்சர், உணவின் சுவையை சோதித்தார்.

முதலமைச்சர் ஆய்வுக்கு வருவார் என்று முன்னதாகவே அம்மா உணவகத்திற்கு தெரிவிக்கப்பட்டு அங்கு தரமாக உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. எஞ்சிய அம்மா உணவகங்களில் நேற்று நடைபெற்றதை போல் கடந்த மூன்றாண்டுகளில் எத்தனைமுறை உணவின் தரத்தை அதிகாரிகளோ, திமுக அமைச்சர்களோ சோதித்தனர் என்று முதலமைச்சர் விளக்குவாரா? ஆய்வு செய்வதாக ஒரு நாடகத்தை 19.7.2024 அன்று திமுக அரசின் முதலமைச்சர் அரங்கேற்றியுள்ளார்.

அம்மா ஆட்சியில் சென்னையில் மட்டும் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வந்த நிலையில் மூன்றாண்டுகளில் அதை உயர்த்தாமல், சுமார் 19 அம்மா உணவகங்களை மூடியுள்ளது இந்த திமுக ஸ்டாலின் இதற்கு என்ன பதிலளிக்கப் போகிறார்?

இனியாவது வாய் பந்தல் போடாமல், உண்மையிலேயே ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் உழைப்பாளிகளுக்கு சுவையுள்ள உணவு வகைகளை வழங்கவும், மூடியுள்ள உணவகங்களை திறப்பதுடன், மேலும் புதிய அம்மா உணவகங்களை, அம்மா ஆட்சியின்போது செயல்பட்டதை போல் முழுமையான பணியாட்களுடன், தரத்துடன் இயங்க நிர்வாகத் திறனற்ற முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்