மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் சென்னையில் விமான சேவைகள் கடும் பாதிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 27 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. விமான நிறுவன ஊழியர்கள், பயணிகளுக்கு போர்டிங் பாஸ்களை கைகளால் எழுதிக் கொடுத்தனர்.

உலக அளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக, நேற்று பகல் 12 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிக்கப்பட்டது.

இதனால்,பயணிகளுக்கு போர்டிங் பாஸ்வழங்குவதிலும், விமானங்கள் புறப்படுவது மற்றும் தரையிறங்குவதில் பிரச்சினை எழுந்தது. குறிப்பாக, இண்டிகோ, ஆகாஷா, ஸ்பைஸ்ஜெட், ஏர் இந்தியா ஏர்லைன்ஸ் விமானங்களின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த விமானங்களில் பயணம் செய்ய வந்த பயணிகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் போர்டிங் பாஸ் வழங்க முடியாத நிலைஏற்பட்டது. இதனால், அந்த நிறுவனங்களின் கவுன்ட்டர்களில் கூடுதல் ஊழியர்கள் அமர்த்தப்பட்டு, கைகளால் போர்டிங் பாஸ்களை எழுதிக் கொடுத்தனர். ஒவ்வொரு பயணிக்கும் கைகளால் எழுதி கொடுப்பதால், பயணிகள் விமானம் ஏறுவதில் தாமதம் ஏற்பட்டது.

அதன்காரணமாக, சென்னையில் இருந்து மும்பை, லக்னோ,பெங்களூரு, மதுரை, திருவனந்தபுரம், பாட்னா, சிலிகுரி,ஹைதராபாத், கோவை, தூத்துக்குடி, திருச்சி, டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா, புனே, கோவா மற்றும் சர்வதேசவிமானங்களான சிங்கப்பூர், கோலாலம்பூர், இலங்கை, டாக்கா உள்ளிட்ட 40 -க்கும்மேற்பட்ட விமானங்கள், சுமார் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

டெல்லி - சென்னை, சென்னை - டெல்லி, பெங்களூரு - சென்னை உட்பட புறப்பாடு, வருகை என 27 விமான சேவைகளை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் ரத்து செய்தது. விமானங்கள் ரத்து, தாமதம், போர்டிங் பாஸ்களை பெற நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பு போன்றவற்றால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

இதுதொடர்பாக சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, “இன்று (நேற்று) மதியம் இருந்த நிலையைவிட, இரவு 7 மணி அளவில் இணையதள சேவை சிறிது மேம்பட்டுள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் இணையதள சேவைதான் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து விமான நிறுவனங்களின் இணையதள சேவை முழுமையாக விரைவில் சீராகும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE