இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரத்தில் 1,000+ மீனவர்கள் ஆர்ப்பாட்டம் 

By கி.தனபாலன்


ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க அனுமதி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க கோரியும் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற தமிழக மீனவர்கள் 74 பேரையும், 8 விசை படகுகள், 4 நாட்டுப் படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். முன்னதாக இலங்கை சிறையில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள 6 மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். கடந்த 2018 முதல் தற்போது வரை இலங்கை கடற்படை வசம் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 170-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டு படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

கச்சத்தீவு பகுதியில் இந்திய, இலங்கை மீனவர்கள் பிரச்சினையின்றி மீன் பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மீனவர்கள் சார்பில் ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஜூலை 19) நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகபட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர். இலங்கை சிறையில் நோய் வாய்ப்பட்டு இருக்கக்கூடிய ராமேசுவரம் மீனவர்கள் 3 பேருக்கு உரிய சிகிச்சை அளித்து விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதில் ராமநாதபுரம் எம்எல்ஏ மற்றும் திமுக மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், காங்கிரஸ் எம்பிக்கள் விஜய் வசந்த்(கன்னியாகுமரி), ராபர்ட் ப்ரூஸ் (நெல்லை), சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஸ்குமார் எம்எல்ஏ, இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்ணாண்டோ, நகராட்சி தலைவர்ள் நாசர்கான்(ராமேசுவரம்), கார்மேகம்(ராமநாதபுரம்) விசைப்படகு மீனவர்கள் சங்க தலைவர்கள் ஜேசுராஜா, தேவதாஸ், போஸ், எமரிட் சகாயம், காரல்மார்க்ஸ், பாம்பன் நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் எஸ்.பி.ராயப்பன் உள்ளிட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் வசந்த் எம்பி கூறியதாவது: “வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மீனவர் பிரச்சினை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, நாடாளுமன்ற காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீனவர் பிரச்சினையை விவாதிக்க ஏற்பாடு செய்யப்படும்,” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE