“முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் முடிவு...”- உதயநிதி துணை முதல்வர் பதவி குறித்து அமைச்சர் சேகர்பாபு பதில் 

By செய்திப்பிரிவு

சென்னை: “இந்த பெரிய விஷயங்கள் எல்லாம் தமிழக முதல்வர் எடுக்கின்ற முடிவைப் பொறுத்தது,” என்று உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார்.

சென்னையில் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அனைத்துலக முருக பக்தர்கள் மாநாடு வரும் ஆகஸ்ட் 24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. முதல்வர் தலைமையில் இருக்கின்றன இந்துசமய அறநிலையத் துறை உயர் மட்டக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்த மாநாடு நடைபெற இருக்கிறது. முதல்வரின் ஒட்டுமொத்தமான வழிகாட்டுதலின்டி, மாநாட்டில் சிறப்பு மலர் வெளியிடப்படவுள்ளது.

மேலும், இம்மாட்டுக்காக, முருகபெருமான் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்பட்டுள்ளன. இதுவரை வெளிநாடுகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் வந்துள்ளன. அண்டை மாநிலங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் வந்துள்ளன. தமிழகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் வந்துள்ளன. இதில் இருந்து தேர்வு செய்யப்படும் ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் 5 ஆயிரத்து்ககும் மேற்பட்ட முருக பக்தர்கள் உட்கார்ந்து மாநாட்டு நிகழ்வுகளைக் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டவுள்ளன.

நவீன தொழில்நுட்பத்துடன் 3டி வடிவில், அறுபடை வீடுகளை அரங்கமாக அமைத்து பக்தர்கள் முருகபெருமான தரிசிக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முருகனின் சிறப்பு பாடல் ஒன்று 3டி வடிவில் உருவாக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. முருகனின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் கண்காட்சி ஒன்று அமைக்கப்படவுள்ளது. வெளிநாட்டு பக்தர்களுக்கு தங்குமிடம், வாகன வசதி, பிற கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இந்த மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. 24-ம் தேதி காலை 8.30 மணிக்குத் தொடங்கி பகல் 1 மணி வரையிலும், பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என்று இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு இலவசமாக கட்டணமில்லாமல் தரமான உணவுகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்றார்.

அப்போது அவரிடம் , தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணத்துக்கு முன்பாக, அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவதாக வரும் செய்தி தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “முதல்வர் வலதுபுறம் செல்லுமாறு கூறினால், வலதுபக்கம் செல்வோம். இடதுபுறம் செல்லுமாறு கூறினால், இடதுபக்கம் செல்வோம். முன்னோக்கி செல் என்றால் முன்னோக்கிச் செல்வோம், பின்னோக்கி செல் என்றால் பின்னோக்கி செல்வோம். நான் அடிப்படை தொண்டர்களில் தொண்டன் நான். இந்த பெரிய விஷயங்கள் எல்லாம் தமிழக முதல்வர் எடுக்கின்ற முடிவைப் பொறுத்தது,” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE