புதுச்சேரி - மாஹேயில் கனமழை: வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் பாதிப்பு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி பிராந்தியமான மாஹேயில் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அந்த வீடுகளில் இருந்தவர்களை பாதுகாப்புடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். புதுச்சேரியின் மாஹே பிராந்தியத்தையொட்டியுள்ள கேரளத்தின் கண்ணூர், கோழிக்கோடு மாவட்டங்களில் கனமழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஹேயில் இன்று பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

வானிலை மையம் அறிவித்ததைப் போலவே கனமழை பொழிவால் மாஹேயில் பல பகுதிகள் இன்று வெள்ளக்காடானது. மாஹே பிராந்தியத்தின் மண்டல நிர்வாகி மோகன் குமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மூலக்கடவு, பந்தக்கல் ஆகிய பகுதிகளில் அதிகளவு வெள்ளநீர் கரைபுரண்டோடியது. 11 வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. அங்கிருந்தோரை படகுகள் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தோர் மீட்டனர். அவர்கள் அனைவரும் தங்களின் உறவினர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுவரை பாதுகாப்பு மையங்களில் தங்க மக்கள் யாரும் வராத சூழலிலும் தேவையான ஏற்பாடுகளை மாஹே பிராந்திய அதிகாரிகள் செய்துள்ளனர். தொடர் மழை பாதிப்புகள் குறித்த கண்காணிப்புப் பணிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE