எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஜூலை 31 வரை நீதிமன்றக் காவல் - திருச்சி சிறையில் அடைப்பு

By ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நில மோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவ்வழக்கில் ஜூலை 31 வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கரூர் மாவட்டம் வாங்கல் குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் தொழிலபதிபர் பிரகாஷ் (50). இவர், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், தனது உறவினரான பிரவீன் உள்ளிட்ட 13 பேர் தனது மனைவி, மகள் ஆகியோரை மிரட்டி, கடத்தி மோசடி செய்து ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக கடந்த மாதம் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இப்புகாரில் வாங்கல் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 22-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கரூரில் போலி சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டதாக மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில், யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 9-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தானும் சேர்க்கப்படலாம் என்ற அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 12-ம் தேதி முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். மேலும் கரூரில் இருந்து தலைமறைவானார்.

இந்நிலையில் இவ்வழக்கு கடந்த மாதம் 14-ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்பட்டன. அதே நாளில் நில உரிமையாளர் ஷோபனாவின் தந்தை பிரகாஷ் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீன் உள்ளிட்ட 13 பேர் மீது புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் 13 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 22-ம் தேதி வாங்கல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு ஜூன் 25-ல் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி போலீஸார் விஜயபாஸ்கரை கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் 30-ம் தேதி, தனது தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் அவருடன் இருக்கவேண்டும் எனக்கூறி விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் ஆகியோர் சிபிசிடிஐ மற்றும் வாங்கல் வழக்குகளில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களும் ஜூலை 6-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் மற்றும் அவரது வீடு, நிறுவனங்களில் கடந்த 5, 7, 11-ம் தேதிகளில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தினர். மேலும், விஜயபாஸ்கர் மனைவி விஜயலட்சுமியிடமும் விசாரணை நடத்தினர். அத்துடன் இன்னும் சிலரையும் சிபிசிஐடி அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.இதைத் தொடர்ந்து விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு ஜூலை 15-ம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் கடந்த 5 வாரங்களாக தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் வழக்கின் முக்கிய நபரான பிரவீன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கேரள மாநிலம் திருச்சூரில் ஜூலை 16-ம் தேதி கைது செய்தனர். பின்னர், அவர்களை கரூர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் இருவரையும் ஜூலை 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து 17-ம் தேதி அதிகாலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையிலும், பிரவீன் குளித்தலை கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

இன்ஸ்பெக்டர் சிறையிலடைப்பு: நில மோசடிக்கு உதவிடும் வகையில் உண்மை ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என ‘நான்டிரேஷபிள்’ சான்றிதழ் வழங்கிய சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளராக இருந்த பிருதிவிராஜை சிபிசிஐடி போலீஸார் 16-ம் தேதி இரவு சென்னையில் கைது செய்தனர். பின்னர் அவரை 17-ம் தேதி கரூர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின் அவரை கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் நீதிபதி பரத்குமார் முன் ஆஜர்படுத்தினர். அவரை ஜூலை 31-வரை நீதிமன்ற காவலில் வைக்கவும், சேலம் மத்திய சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

வாங்கல் காவல் நிலைய வழக்கில் ஆஜர்: வாங்கல் காவல் நிலையத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருச்சி மத்திய சிறையில் இருந்த விஜயபாஸ்கர் 18-ம் தேதி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக வாங்கல் போலீஸார் திருச்சி மத்திய சிறையில் இருந்து விஜயபாஸ்கரை கரூர் நீதிமன்றத்துக்கு இன்று (ஜூலை 19) அழைத்து வந்தனர். குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் நீதிபதி மகேஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட விஜயபாஸ்கரை ஜூலை 31 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

விஜயபாஸ்கர் நீதிமன்றம் வருவதையடுத்து ஏராளமான அதிமுகவினர் நீதிமன்ற வளாகத்தில் திரண்டனர். இயையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நீதிமன்றத்தில் நுழைவாயில் மூடப்பட்டன. இதையடுத்து வழக்கறிஞர்கள் தங்களால் நீதிமன்றத்துக்குள் வரமுடியவில்லை என வாக்குவாதம் செய்ததை அடுத்து நுழைவாயில் திறக்கப்பட்டது. விஜயபாஸ்கர் ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூலை 22-ம் தேதி நடைபெறுகிறது. விஜயபாஸ்கரை தொடர்ந்து குளித்தலை கிளை சிறையில் இருந்த பிரவீனை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அவரையும் ஜூலை 31 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, போலீஸார் குளித்தலை கிளை சிறைக்கு அவரை மீண்டும் அழைத்துச் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்